பெயரியல்

வேற்றுமை
வேற்றுமை இனைய என்பதும் இத்துணைய
என்பதும்

 
291ஏற்கு மெவ்வகைப் பெயர்க்குமீ றாய்ப்பொருள்
வேற்றுமை செய்வன வெட்டே வேற்றுமை
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறு ஆய் தம்மை ஏற்றுக்கொள்ளுதற்கு உரிய எவ்வகைப்பட்ட பெயர்களுக்கும் இறுதியாய் , பொருள் வேற்றுமை செய்வன வேற்றுமை எட்டே = அப் பெயர்ப்பொருளை வேற்றுமைப் படுத்துவனவாகிய வேற்றுமைகள் எட்டே ஆகும் .

தன்மை ஏற்ற பெயர்ப் பொருளுக்கு வேற்றுமை என்னும் காரியத்தைச் செய்யும் கருத்தா ஆகிய உருபை வேற்றுமை என்றது காரிய ஆகுபெயர்.வேற்றுமை என்னும் பண்புப்பெயர் பண்பிக்கு ஆகாமையால் பண்பாகுபெயர் அன்றாயிற்று .

34