பெயரியல்

வேற்றுமை
ஏழாம் வேற்றுமை

 
301ஏழ னுருபுகண் ணாதி யாகும்
பொருண்முத லாறு மோரிரு கிழமையின்
இடனாய் நிற்ற லிதன்பொரு ளென்ப .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஏழன் உருபு கண் ஆதி ஆகும் = ஏழாம் வேற்றுமையின் உருபு முன் சொல்லப்பட்ட கண்ணே அன்றி அது முதலாகிய பிறவுமாம் ; இதன் பொருள் - இவ் உருபுகளின் பொருளாவது ; பொருள் முதல் ஆறும் ஓரிரு கிழமையின் இடன் ஆய் நிற்றல் என்ப = பொருள் ஆதியாகிய ஆறும் ஆறாம் வேற்றுமைச் சூத்திரத்திலே சொல்லப்பட்ட இருகிழமைப் பொருள்களுக்கும் இடமாய் நிற்கும் உருபு ஏற்ற பெயர்ப்பொருள் வேறுபட்ட அவ் இடப் பொருளாம் என்று சொல்லுவர் புலவர் .

மணியின்கணிருக்கின்ற தொளி ........ தற்
பனையின்கண் வாழ்கின்றதன்றில் ...பிறி
பொருளிடமாயிற்று
ஊரின் கணிருக்கு மில்லம் ....................தற்
ஆகாயத்தினகட் பறக்கின்றது பருந்து ....பிறி
இடமிடமாயிற்று .
நாளின்கணாழிகையுள்ளது ...................தற்
வேனிற்கட் பாதிரி பூக்கும் ....................பிறி
காலமிட மாயிற்று .
கையின்கணுள்ளது விரல் .......................தற்
கையின்கண் விளங்குகிறது கடகம்.........பிறி
சினையிட மாயிற்று
கறுப்பின்கண் மிக்குள்ளதழகு .................தற்
இளமையின் கண் வாய்த்தது செல்வம் .....பிறி
குணமிட மாயிற்று .
ஆடற்கணுள்ளது சதி ..............................தற்
ஆடற்கட் பாடப்பட்டது பாட்டு ............பிறி
தொழிலிட மாயிற்று .

வினைமுதல் வழியாக வினைமுதல் தொழிற்கு ஆயினும் செயப்படுபொருள் வழியாகச் செயப்படுபொருளில் இருக்கின்ற பயனுக்கு ஆயினும் இடமாகும் பொருள் இடப்பொருள் , என்பர் வடநூலார் .

1 .மணியின் கண் இருக்கின்றது ஒளி என்புழி , ஒளிஎன்னும் வினைமுதலின் வழியாக அதனது இருத்தல் தொழிற்கு மணி இடம் ஆயிற்று .

2 .கழுவின்கண் கள்ளனை ஏற்றினான் என்புழிக் , கள்ளன் என்னும் செயப்படுபொருளின் வழியாக அச்செயப்படுபொருளில் இருக்கின்ற உயிர்ப் பிரிவாகிய பயனுக்குக் கழு இடம் ஆயிற்று .

இடப்பொருள் - தன்னிற் சிறிது இடமாவதும் , தான் முழுதும் இடமாவதும் , விடயமாவதும் என மூவகைப்படும் .

1 . ஊர்க்கண் இருந்தான் , பாயில் இருக்கின்றான் - ஒரோவழி மேவல் .

2 . மணியின்கண் ஒளி , உயிரின்கண் உணர்வு , பாலின்கண் சுவை , தீயின் கண் சூடு , நீரின்கண் சீதம் - எங்கும் வியாபகம் .

3 . கல்வியின்கண் ஆசை வைத்தான் , குருவின் கண் அன்பு செய்தான் - விடயம் .

சிறுபான்மை ஏழன் உருபுகள் , கூட்டிப் பிரித்தற்கு எல்லை ஆகும் பொருளிலும் , பிரித்துக் கூட்டலில் குழுவாகும் பொருளிலும் , ஒரு தொழில் காலத்தைக் குறிக்கும் பிறிது தொழிலாகும் பொருளிலும் , வரும் .

1 . மக்களில் உயர்ந்தோர் அந்தணர் ; குறில் ஐந்தனுள் அஇஉஇம் மூன்றும் சுட்டு - கூட்டிப் பிரிக்கும் எல்லைப்பொருள் .

2 . அறம்செயு மகன் தேவருள் வைக்கப்படுவான் ; கல்வியறிவு இல்லாதவன் விலங்கினுள் வைத்து எண்ணப்படுவான் - பிரித்துக்கூட்டும் குழுப்பொருள் .

3 . பால் கறக்கையில் வந்தான் ; பொருதற்கண் மழை பெய்தது - ஒருதொழில் காலத்தைக் குறிக்கும் பிறிது தொழில் .