பொதுவியல்

பொருள்கோள்
மொழிமாற்றுப் பொருள்கோள்

 
413ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை
மாற்றியோ ரடியுள் வழங்கன்மொழி மாற்றே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை - ஏற்ற இரண்டு பயனிலைகளுக்குப் பொருந்தும் மொழிகளை , மாற்றி - ஏலாத பயனிலைகளுக்குத் தனித்தனி கூட்டி , ஓரடியுள் வழங்கல் மொழிமாற்று = ஓர் அடியுள்ளே சொல்லும் பொருள்கோள் மொழிமாற்றுப் பொருள்கோளாம்.

"சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய - யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப - கானக நாடன் சுனை" என வரும். இதனுள், ஆழ என்னும் பயனிலைக்கு இயைந்த அம்மி என்னும் மொழியினை மிதப்ப என்னும் பயனிலைக்கும், மிதப்பவென்னும் பயனிலைக்கு இயைந்த சுரை யென்னும் மொழியினை ஆழவென்னும் பயனிலைக்கும், நீத்து என்னும் பயனிலைக்கு இயைந்த முயல்என்னும் மொழியினை நிலை என்னும் பயனிலைக்கும், நிலை என்னும் பயனிலைக்கு இயைந்த யானை என்னுமொழியினை நீத்து என்னும் பயனிலைக்குமாக மாற்றிக் கூறியவாறு காண்க.