எழுத்தியல்

இடைநிலை மயக்கம்
தனிமெய்யுடன் தனிமெய்யாய் மயங்குவன இவை,
மொழிக்கு உறுப்பாக மயங்காதன இவை"

 
119ய ர ழ வொற் றின்முன் க ச த ப ங ச ந ம
ஈரொற் றாம்ரழத் தனிக்குறி லணையா.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ய ர ழ முன் ஒற்றின் க ச த ப ங ஞ ந ம - ய, ர ழ என்னும் மூன்று மெய்களும் இவற்றின்முன் மயங்கும் என்ற பத்து மெய்களுள் ககரம் முதலாகிய இவ்வெட்டு மெய்களும், ஈரொற்று ஆம் - தனி மெய்யும் உயிர்மெய்யுமாகி மயங்குதல் அன்றியும், ஈரொற்றாயும் மயங்கும்; ர ழ த் தனிக் குறில் அணையா - ரகார ழகார மெய்கள் தனிக் குறில்கீழ் ஒற்றாக மயங்கா.

வேய்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை எனவும்,
வேய்ச்சிறை, வேர்ச்சிறை, வீழ்ச்சிறை, எனவும்,
வேய்த்தலை, வேர்த்தலை, வீழ்த்தலை எனவும்,
வேய்ப்புறம், வேர்ப்புறம், வீழ்ப்புறம் எனவும்,
வேய்ங்குழல், ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு எனவும்
தேய்ஞ்சது, கூர்ஞ்சிறை, பாழ்ஞ்சுணை எனவும்,
காய்ந்தனம், நேர்ந்தனம், வாழ்ந்தனம் எனவும்,
வேய்ம்புறம், ஈர்ம்பணை, பாழ்ம்பதி
எனவும் வரும் .