யரழ முன்னர்க் கசதப - யகர ரகர ழகர மெய்களின் முன் ககர , சகர , தகர பகரங்கள் வரின் , அல்வழி இயல்பும் மிகலும் = அல்வழியில் இயல்பாதலும் மிகுதலும் , வேற்றுமை மிகலும் இனத்தொடு உறழ்தலும் இனத்தோடு உறழ்தலும் = வேற்றுமையில் மிகுதலும் வல்லினமாவது மெல்லினமாவது மிகுதலும் , விதி ஆகும்-விதியாகும். அல்வழி இயல்பு மிகுதி இரண்டனுள் இயல்பு எழுவாத்தொடர் உம்மைத்தொகை வினைத்தொகைகளிலும் மிகுதி பண்புத்தொகை உவமைத்தொகைகளிலும் கொள்ளப்படும். யகர ஈற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும் ; ரகர ஈற்று வினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் இயல்பாம். 1. வேய்குறிது , வேர்சிறிது , யாழ்பெரிது எனவும், பேய் பூதம், நீர்கனல் , இகழ்புகழ் எனவும், செய்கடன் ,தேர்பொருள், வீழ்ப்புனல் எனவும் , உண்ணியர் போவான் எனவும், எழுவாய்த்தொடர் முதலியவற்றில் இயல்பாயின. மெய்க்கீர்த்தி, கார்ப்பருவம் , பூழ்ப்பறவை எனவும், வேய்த்தோள், கார்க்குழல், காழ்ப்படிவம் எனவும் , போய்க்கொண்டான் எனவும் பண்புத்தொகை முதலியவற்றில் மிகுந்தன. 2. நாய்க்கால் ,தேர்த்தலை, பூழ்ச்செவி என வேற்றுமையில் மிகுந்தன. வேய்க்குழல் , வேய்ங்குழல், ஆர்க்கோடு, ஆர்ங்கோடு எனவேற்றுமையில் இனத்தோடு உறழ்ந்தன. ' மேல்' என்ற மிகையால், வாய்புகுவதனினும் என வேற்றுமையில் இயல்பாதலும், பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு எனப் பண்புத்தொகையில் உறழ்தலும் , காய்+யாது= காயாது , நோய் + யானை=நோயானை எனத் தனிக்குறிலைச் சாராத யகரத்தின் முன் யகரம் வரின் இரு வழியும் நிலைமொழி இறுதி யகரங் கெடுதலும் , இன்னும் அடங்காதவைகள் இருந்தால் அவைகளும் கொள்க.
|