யாதன் உருபின் கூறிற்று ஆயினும் = ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமை உருபால் சொல்லப்பட்டது ஆயினும் , பொருள் செல் மருங்கின் வேற்றுமைசாரும் = அப்பொருள் சென்றவழியே அவ் உருபுசேரும் . எனவே , பொருளுக்கு இயையாது மயங்கி வந்த உருபைப் பொருளுக்கு இயைந்த உருபாகத் திரிந்துக் கொள்க என்பதாயிற்று . 1. " நாகு வேயொடு நக்கு வீங்கு தோள் " என்புழி வேய் உடனிகழ்ச்சிப் பொருள் ஆகாது செயப்படுபொருளாய் நிற்றலால் , ஒடு உருபை ஐ உருபாகத் திரித்துக்கொள்க . 2 ." கிழங்கு மணற்கீன்ற முளை " என்புழி , மணல் கோடல் பொருள் ஆகாது இடப்பொருளாய் நிற்றலால் , குவ் உருபைக் கண் உருபாகத் திரித்துக்கொள்க . பிறவும் அன்ன . இனி உரையிற்கோடல் என்னும் உத்தியால் , ஒரு வேற்றுமைப் பொருள் மற்றை வேற்றுமை உருபுகளோடு தகுதியாக வருதலும் உண்டு எனக் கொள்க , அவை வருமாறு : - 1. வினைமுதற்பொருள் , எழுவாய் உருபு மூன்றன் உருபுகளோடு அன்றிச் , சிறுபான்மை நான்கன் உருபு ஆறன் உருபுகளோடும் வரும் . சூத்திரம் : " ஒன்று மூன்றுநான்கு எனும் உருபொடு வருமே வினைமுத லெனவகுத் தனரே. " அவர்க்குச் செய்யத்தகும் அக்காரியம் ; 4 - கு ; அவரது வரவு :- 6 - அது என வரும் . 2. செயப்படுபொருள் , இரண்டன் உருபோடன்றிச் , சிறுபான்மை எழுவாய் வேற்றுமை உருபு முதல் ஏழாம் வேற்றும உருபு ஈறாய் உருபுகள் எல்லாவற்றோடும் வரும் . சூத்திரம் : " எல்லா உருபொடுஞ் செயப்படு பொரு ளெழும் ." சோறடப்பட்டது ; எழுவாய்.அரிசியாற் சோறாக்கினான் : 3 - ஆல் . அவட்குக் கொள்ளும் இவ்அணி கலம் ; 4 - கு . பழியின் அஞ்சும் ; 5 - இன் . நூலது குற்றம் கூறினான் ; 6 - அது . தூணின்கண் சார்ந்தான் ; 7 - கண் என வரும் . 3. கருவிப்பொருள் , மூன்றன் உருபு ஐந்தன் உருபுகளோடு அன்றிச் சிறுபான்மை எழுவாய் உருபு நான்கன் உருபு ஆறன் உருபுகளோடும் வரும் . சூத்திரம் : " ஒன்று மூன்றுநான் கைந்தா றுருபொடு கருவி வருமெனக் கருதினர் பெரியோர் " கண் காணும் ; எழுவாய் , கண்ணிற்குக் காணலாம் ; 4 - கு . கண்ணது காட்சி ; 6 - அது என வரும் . 4. கோடற்பொருள் , நான்கன் உருபோடு அன்றிச் , சிறுபான்மை எட்டாம் வேற்றுமை ஒழிந்த எல்லா உருபுகளோடும் வரும் . சூத்திரம் : " எல்லா வுருபொடுங் கொள்வோ னெழுமே ." " இரப்பவ ரென்பெறினுங் கொள்வர் " எழுவாய் " செய்யவ டவ்வையைக் காட்டி விடும் " 2 - ஐ நாகராற்பலி ; 3 - ஆல் ; நாகரி னன்பு செய்தான் ; 5 - இன் ; நாகரது பலி . 6 - அது ; நாகர்க ணன்பு செய்தான் ; 7 - கண் என வரும் . 5 . ஐந்தாம் வேற்றுமைப் பொருள்களுள் , நீக்கப் பொருள் சிறுபான்மை இரண்டன் உருபோடும் , எல்லைப்பொருள் சிறுபான்மை நான்கன் உருபோடும் வரும் . சூத்திரம் : " இரண்டுநான் கைந்தொடு மெழுமே நீக்கம் " . மதுரையை நீங்கினான் ; 2 - ஐ , நீக்கப்பொருள் , மதுரைக்கு வடக்குச் சிதம்பரம் ; 4 - கு , எல்லைப் பொருள் . 6 . சம்பந்தப்பொருள் , ஆறன் உருபோடு அன்றிச் , சிறுபான்மை நான்கன் உருபு ஐந்தன் உருபு ஏழன் உருபுகளோடும் வரும். சூத்திரம் :- "நான் கைந் தாறேழொடு குறைநடக்கும்" சாத்தமனுக்கு மகன் ; 4 - கு , மரத்தி னீங்கின கொம்பு ; 5 - இன் உயிரின்க ணுணர்வு ; 7 - கண் என வரும் . 7 . இடப்பொருள் , ஏழன் உருபோடு அன்றிச் , சிறு பான்மை எழுவாய் உருபு இரண்டன் உருபு நான்கன் உருபுகளோடும் வரும் . சூத்திரம் : " ஒன்றி ரண்டுநான் கேழோ டிட மெழும் " தூண் போதிகை தொட்டது ; எழுவாய் , தூணைச் சார்ந்தான் ; 2 - ஐ இன்றைக்கு , நாளைக்கு , பகலைக்கு , அந்திக்கு , சந்திக்கு , மாலைக்கு , காலைக்கு , ஊர்க்கு , வீட்டிற்கு வருவன் ; 4 - கு என வரும் .
|