மெய்யீற்றுப் புணரியல்

லகர ளகர வீறு

 
227லளவேற் றுமையிற் றடவு மல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவு மிடைவரி னியல்பும்
ஆகு மிருவழி யானு மென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ல ள - லகர ளகரமாகிய இரண்டு மெய் யீறுகளும் , வலி வரின் = வல்லினம் வந்தால் , வேற்றுமையில் றடவும் - வேற்றுமைக்கண் முறையே றகார. டகார மெய்களும் , அல்வழி அவற்றோடு உறழ்வும் ஆம் - அல்வழிக்கண் றகார டகாரங்களுடனே உறழ்வனவும் ஆகும் , இரு வழியானும் = இரு வழிக்கண்ணும் . மெலி மேலின் ன ணவும் = மெல்லினம் வந்தால் முறையே னகார ணகார மெய்களும் , இடை வரின் இயல்பும் ஆகும் = இடையினம் வந்தால் இயல்பும் ஆகும் , என்ப - என்று சொல்லுவர் புலவர் .

1. கல் + குறை = கற்குறை , முள் + குறை=முட்குறை என வல்லினம் வர வேற்றுமையில் றகர டகரங்களாகத் திரிந்தன.

2. கல் + குறிது = கல்குறிது , கற்குறிது , முள் + குறிது = முள்குறிது, முட்குறிது என வல்லினம் வர அல்வழியில் ஒருகால் இயல்பாகியும் ஒருகால் திரிந்தும் உறழ்ந்தன .

3. கல் + மாண்டது = கன்மாண்டது, முள் + மாண்டது=முண்மாண்டது எனவும் , கல் + மாட்சி = கன்மாட்சி , முள் + மாட்சி = முண்மாட்சி எனவும் மெல்லினம் வர இருவழியும் னகர ணகரமாகத் திரிந்தன .

4. கல் + யாது = கல்யாது , முள் + யாது = முள்யாது எனவும் , கல் + யாப்பு= கல்யாப்பு, முள் + யாப்பு = முள்யாப்பு எனவும் இடையினம் வர இரு வழியும் இயல்பாயின.

'அல்வழி யவற்றோ டுறழ்வும்' என்றாரேனும் , இவற்றோடு மயங்காத தகரம் வரின், ஏற்புழிக்கோடலால் கற்றீது முட்டீது எனத் திரிபு ஒன்றுமே கொள்க .