மெய்யீற்றுப் புணரியல்

லகர ளகர வீறு

 
230லளவிறு தொழிற்பெய ரீரிடத்து முவ்வுறா
வலிவரி னல்வழி யியல்புமா வனவுள .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
லள இறு தொழிற்பெயர் ஈரிடத்தும் உவ்வுறா - லகாரத்தை இறுதியாக உடைய விகுதி பெற்ற தொழிற்பெயரும் ளகாரத்தை இறுதியாக உடைய முதல்நிலை திரிந்த தொழிற்பெயரும் இரு வழியிலும் யகரம் அல்லாத மெய்கள் வந்தால் உகரம் பெறாவாம் , வலி வரின் அல்வழி இயல்பும் ஆவன உள - வல்லினம் வந்தால் அல்வழிக்கண் உறழாது இயல்பு ஆவனவும் சில உள .

1 . ஆடல்சிறந்தது , ஆடற்சிறந்தது ; ஆடனன்று , ஆடல்வலிது எனவும் ; ஆடற்சிறப்பு , ஆடனன்மை ஆடல்வன்மை எனவும் ; கோள்கடிது , கோட்கடிது , கோணன்று , கோள்வலிது எனவும் ; கோட்கடுமை , கோணன்மை , கோள்வன்மை எனவும் இரு வழியும் உகரம் பெறாது பொதுவிதியான் முடிந்தன .

2 . நடத்தல் கடிது , நடப்பித்தல் கடிது எனச் சில உறழாது அல்வழியில் இயல்பாயின .

இயல்பும் என்ற உம்மையால் , பின்னல்கடிது , பின்னற்கடிது , உன்னல்கடிது , உன்னற்கடிது எனப் பொதுவிதியால் உறழ்தலே பெரும்பாலன என்க .

' ஈரிடத்தும் உவ்வுறா ' என்றது ஐயமறுத்தல் ; 'வலி வரினல்வழி யியல்புமா வனவுள ' என்றது ஒருவாறு " அல்வழி யவற்றோடு உறழ்வும் "( சூ . 227 ) என எய்தியது விலக்கல் .