வலித்தல் - மெல்லொற்றை வல்லொற்று ஆக்கலும் , மெலித்தல் - வல்லொற்றை மெல்லொற்று ஆக்கலும் , நீட்டல் - குற்றெழுத்தை நெட்டெழுத்து ஆக்கலும் , குறுக்கல் - நெட்டெழுத்தைக் குறளெழுத்து ஆக்கலும் , விரித்தல் - இல்லாத எழுத்தை வருவித்தலும் , தொகுத்தல் - உள்ள எழுத்தை நீக்கலும் , செய்யுள் வேண்டுழி வரும் - செய்யுளிடத்து அடி, தொடை முதலானவைகளை நோக்கி அமைக்க வேண்டும் இடத்து வருவனவாம் . " குறுத்தாட் பூதஞ் சுமந்த வறக்கதி ராழியெம் மண்ணலைத் தொழினே " - இங்கே குறுந்தாள் எனற்பாலது குறுத்தாள் என வலிந்து நின்றது . " தன்டையின் இனக்கிளி கடிவோள் பண்டையள் அல்லள் மானோக் கினளே " - இங்கே தட்டை எனற்பாலது தண்டை என மெலிந்து நின்றது . 'தீத்தொழிலே கன்றித் திரிதருந் தெருவைபோற் போத்தறார் புல்லறி வினார் ' - இங்கே பொத்தறார் என்ற பாலது போத்தறார் என நீண்டு நின்றது . ' யானை - யெருத்தத் திருந்த விலங்கிலைமேல் தென்னன்திருத்தார் நன்றென்றேன் தியேன் ' - இங்கே தீயேன் எனற் பாலது தியேன் எனக் குறுகி நின்றது . ' சிறியிலை வெதிரி நெல்விளை யும்மே ' - இங்கே விளையுமே என்னற்பாலது விளையும்மே என மகர மெய்விரிந்து நின்றது . சிறிய இலை என்றபாலது சிறியிலை என யகர உயிர்மெய் தொக்கு நின்றது .
|