உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
181வன்றொட ரல்லன முன்மிகா வல்வழி.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
வன்றொடர் அல்லன முன் அல்வழி மிகா -வன்தொடர் ஒழிந்த ஐந்து குற்றியலுகர ஈற்றின் முன்னும் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாகும்.

நாகு கடிது, எஃது சிறிது, வரகு தீது, குரங்கு பெரிது, தெள்கு கொடிது எனவும் . ஏகு கால், அஃகு பிணி, பெருகு தனம், ஓங்கு குலம், எய்து பொருள் எனவும், சேறு கொற்றா , வருது சாத்தா , வந்து தேவா , செய்து பூதா எனவும் , பொருது சென்றான் , அறிந்து தந்தான் , எய்து கொன்றான் எனவும் அல்வழியில் இயல்பாயின .

ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற அங்கு , இங்கு , உங்கு , எங்கு , ஆங்கு , ஈங்கு , ஊங்கு , யாங்கு , யாண்டு என்னும் மென்றொடர்க் குற்றுகர ஈற் றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும் .

அங்குக் கொண்டான் , இங்குக் கொண்டான் , ஊங்குக் கொண்டான் , எங்குக் கெண்டான் , ஆங்குக் கொண்டான் , ஈங்குக் கொண்டான் , ஊங்குக் கொண்டான் , யாங்குக் கொண்டான் , யாண்டுக் கொண்டான் , சென்றான் , தந்தான் , போயினான் என வரும் .

ஏழாம் வேற்றுமைக் காலப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று , பண்டு , முந்து என்னும் மென்தொடர்க் குற்றுகர ஈற்று இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் , அன்று கண்டான் . இன்று சென்றான் , என்று தந்தான் , பண்டு பெற்றான் , முந்து கொண்டான் என இயல்பாயே முடியும்

இது ' இயல்பினும் விதியினும் ' என்னும் சூத்திரத்தால் எய்தியது ஒருவழி விலக்குதல்.