வல் இரு வழியும் தொழிற்பெயர் அற்று = வல் என்னும் சூதாடு கருவிப் பெயர் யகரம் அல்லாத மெய்கள் வரின் முதல்நிலைத் தொழிற்பெயர் போல இரு வழியும் உகரச் சாரியை பெறும் , பலகை நாய் வரினும் வேற்றுமைக்கு அவ்வுமாம் - பலகை , நாய் என்னும் இருபெயர் வரினும் பிற பெயர்கள் வரினும் வேற்றுமைக்கண் உகரச் சாரியையே அன்றி அகரச் சாரியையும் பெறும் . 1 . வல்லுக்கடிது , நன்று , வலிது எனவும் , வல்லுக்கடுமை , நன்மை , வன்மை , எனவும் இரு வழியும் தொழிற்பெயர் போல உகரச் சாரியை பெற்றது . [ வல் = சூதாடு கருவி ] 2 . வல்லப்பலகை , நாய் , புலி , குதிரை , எனவும் , வல்லுப் பலகை , நாய் , புலி , குதிரை , எனவும் வேற்றுமையில் அகரச் சாரியையும் உகரச் சாரியையும் பெற்றது , வல்லப்பலகை - வல்லினதறை வரைந்த பலகை , வல்லநாய் - வல்லினுணாய் என விரியும் . இது "லளவேற் றுமையிற் றடவும்" ( சூ. 227 ) என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் .
|