வல்லொற்று வரின் இடத்தொகை ஆகும் = வல் ஒற்றானது இடையே வந்தால் இடத்தின் கண்ணே தொக்க தொகையாகும் , மெல்லொற்று வரின் பெயர்த்தொகை ஆகும் = மெல் ஒற்றானது இடையே வந்தால் பெயர்த்தொகை ஆகும் = மெல் ஒற்றானது இடையே வந்தால் பெயரின்கண்ணே தொக்க தொகையாகும். 1. வடுகக்கண்ணன் . இது வடுகநாட்டில் பிறந்த கண்ணன் என விரியும். வடுகங்கண்ணன் , இது வடுகனாகிய கண்ணன் என்றாயினும் ,வடுகனுக்கு மகனாகிய கண்ணன் என்றாயினும், விரியும். 2.துளுவச்சாத்தன் இது துளுவநாட்டில் பிறந்த சாத்தன் என விரியும். துளுவஞ்சாத்தன் - இது துளுவனாகிய சாத்தன் என்றாயினும், துளுவனுக்கு மகனாகிய சாத்தன் என்றாயினும் விரியும். வடுகக்கண்ணன் என்னும் இடத்தொகை," மவ்வீறொற்றழிந்து " என்னும் சூத்திர விதியாலும், " இயல்பினும் விதியினும் " என்னும் சூத்திர விதியாலும் புணர்ந்தது. வடுகங்கண்ணன் என்னும் பெயர்த்தொகை " சில விகாரமாம் உயர்திணை என்னும் விதியால் புணர்ந்தது. வல்லொற்று வரின் மெல்லொற்று வரின் "என்றதனால், வல்லின முதன்மொழி வந்து புணர்ந்து இடத்தொகையும் பெயர்த்தொகையுமாய் ஐயுற நிற்கும்போது இக்குறியினாலே துணியப்படும் என்பதும், வடுகநாகன், வடுகவணிகன், வடுகவரசன் எனவரின் சொல்லுவான் குறிப்பால் அன்றி இவ்வாறு துணியப்படா என்பதும் தாமே போதரும் என்க. 20
|