வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய் ஏகலும் உரித்து - வாழிய என்னும் வியங்கோள் முற்றினுடைய இறுதியிலுள்ள யகர உயிர்மெய் குறைதலும் உரித்தாகும் , அஃது ஏகினும் இயல்பே - அவ் உயிர்மெய் குறைந்து , இகர ஈறாய் நின்றாலும் வல்லினம் பொது விதியினாலே மிகாது சிறப்பு விதியில் கூறிய இயல்பேயாம் . 1 . ஆ வாழி , அந்தணர் வாழி என ஈற்றுயிர்மெய் குறைந்தது . 2 . வாழி கொற்றா , சாத்தா , தேவா , பூதா என ஈற்றுயிர் மெய் குறைந்த இடத்தும் வல்லினம் இயல்பாயின . வியங்கோள் முற்றின் ஈற்றுயிர் மெய் குறையும் என்றது எய்தாதது எய்துவித்தல் . ஈற்றுயிர்மெய் குறைந்த இடத்தும் வரும் வல்லினம் இயல்பேயாம் என்றது "செய்யிய" என்னும் சூத்திரத்தால் ( சூ. 167 ) எய்தியது இகந்துபடாமைக் காத்தல் .
|