விகுதி பதம் சாரியை உருபு அனைத்தினும் - விகுதியும் பதமும் சாரியையும் உருபும் ஆகிய நான்கின் புணர்ச்சியின் இடத்தும் , உரைத்த விதியின் ஓர்ந்து - பொதுப்படச் சொல்லப்பட்ட விதிகளுள் இவ்விதி இதற்குப் பொருந்தும் இவ்விதி இதற்குப் பொருந்தாது என உய்த்துணர்ந்து , ஒப்பன கொளல் = எவ்விதி எதற்குப் பொருந்துமோ அவ் விதியே அதற்குக் கொள்க 1. விகுதிப் புணர்ச்சியுள் , " றவ்வொ டுகர வும்மை நிகழ் பல்லவும் " எனப் பொதுப்பட விதித்தாரேனும் , விதியுளது என்று நினைந்து , இவ்விகுதி வந்த இடத்தெல்லாம் இவ்விரண்டு காலமும் பொருந்தும் என்று கொள்ளற்க ; சென்று , சென்றும் என்ற இடத்து இறந்த காலமும் , சேறு , சேறும் என்ற இடத்து எதிர் காலமும் பொருந்தும் என்று கொள்க . 2. பதப் புணர்ச்சியுள் , " அல்வழி இ ஐம் முன்னர் ஆயினியல்பு மிகலும் விகற்பமு மாகும் " எனப் பொதுப்பட விதித்தாரேனும் , விதியுளது என்று நினைந்து ஆடி திங்கள் , குவளைகண் என இயல்பாம் என்றும் , பருத்திக்குறிது , யானைக் குதிரை என மிகும் என்றும் கொள்ளற்க ; பருத்திகுறிது என எழுவாய்க்கண்ணும் , யானைகுதிரை என உம்மைத்தொகைக் கண்ணும் இயல்பாம் எனவும் ஆடித்திங்கள் எனப் பண்புத்தொகைக் கண்ணும் குவளைக்கண் என உவமைத் தொகைக்கண்ணும் மிகும் எனவும் கொள்க . 3. சாரியைப் புணர்ச்சியுள் " பதமுன் விகுதியும் பதமும் உருபும் புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை வருதலும் தவிர்தலும் விகற்பமுமாகும் " எனப் பொதுப்பட விதித்தாரேனும், விதி உள தென்று நினைந்து , நாட்டினி நீங்கினான் என இன் உருபிற்கு இன் சாரியை வருமென்றும் , நாட்டுக்கணிருந்தான் எனக் கண்ணுருபிற்கு இன் சாரியை வாராது என்றும் கொள்ளற்க ; நாட்டின்கணிருந்தான் எனக் கண் உருபிற்கு இன் சாரியை வருமென்றும் , நாட்டி னீங்கினான் என இன் னுருபிற்கு இன் சாரியை வாராது என்றும் கொள்க . 4. உருபு புணர்ச்சியுள் , " ஒற்றுயிர் முதலீற்றுருபுகள் புணர்ச்சியி னொக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே " எனப் பொதுப்பட விதித்தாரேனும் , விதியுளது என்று நினைந்து , நம்பிக்கு என உயிரீற்று உயர்திணைப் பெயர் முன்வந்த குவ் வுருபு மிகாது என்றும் , நம்பிக் கண் என மன் என்றமையால் கண் உருபு மிகும் என்றும் கொள்ளற்க ; நம்பி கண் எனக் கண் ணுருபு மிகா தென்றும் ; நம்பிக்கு எனக்குவ் வுருபு மன் என்றமையால் மிகும் என்றும் கொள்க. மற்றவைகளும் இப்படியே காண்க .
|