பெயரியல்

பெயர்ச்சொல்
தொழில்பெயர்க்கும் வினையாலணையும்
பெயர்க்கும் இடம் வகுத்தல்

 
286வினையின் பெயரே படர்க்கை வினையா
லணையும் பெயரே யாண்டு மாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
வினையின் பெயர் படர்க்கையே = வினைப்பெயர்கள் படர்க்கை இடத்திற்கே உரியவாகும், வினையாலணையும் பெயர் யாண்டும் ஆகும் = வினையாலணையும் பெயர்கள் தனித்தனி மூவிடத்திற்கும் உரியவாகும்.

வினைப்பெயர் எனினும் தொழிற்பெயர் எனினும் ஒக்கும்.

யான் உணல், நீ உணல், அவன் உணல் எனவும் , உண்டேனை, உண்டாயை, உண்டானை எனவும் வரும்.

வினையாலணையும் பெயரே யாண்டுமாகும் என்றது வினையாலணையும் பெயருக்கு, " அல்லன படர்க்கை" என்றதனால் எய்தியது விலக்கி இடம் வகுத்தது.

வினையின் பெயரே படர்க்கை என்றது, சில வினைப் பெயருக்கு " அல்லன படர்கை" என்றதனால் எய்திய இடம் இங்கே யாண்டுமாகும் என்பதனால் இகந்துபடாமல் காத்தது.

இங்கே வினையின் பெயர் என்றது எல்லாவினைப் பெயரையும் அன்று, யானுணல், நீயுணல், அவனுணல் என்புழி, வரும் வினைப் பெயர். யானுண்டேன், நீயுண்டாய், அவனுண்டான் என்புழி வரும் முற்று வினைபோல, யான், நீ, அவன் என்னும் மூவிடப் பெயர்களுக்குப் பயன் நிலையாகி அவ்வப் பெயரோடும் ஒன்றுபட்டு நிற்றலினால், அவ் இடத்திற்கு உரியவாம் எனக் கொள்ளக்கிடக்கும்; ஆதலால் இவ்வினைப் பெயருக்கு எய்திய இடம் இகந்துபடும் என்பதுபற்றி, அப்படி இகந்து படமால் காக்க வேண்டிற்று. எனதுணல், நினதுணல், அவனதுணல் என்றும், உணல்என்றும், வேறுபட்டு நிற்கும் வினைப்பெயர்கட்கு எய்திய இடம் இகந்துபடுதல் இல்லை என அறிக.

29