விரைவினும் = விரைவினாலும் , மிகவினும் = மிகுதியினாலும் , தெளிவினும் = தெளிவினாலும் , இயல்பினும் - இம்மூன்று காரணங்களும் இன்றி இயல்பினாலும் , முக்காலமும் பிறழவும் பெறூஉம் ஏற்புழி = மூன்று காலங்களும் ஒன்று மற்றொன்றாகச் சொல்லப்படவும் பெறும் ஏற்கும் இடத்து. 1.சோறு வேவாநிற்க அதனை உண்டுபோதற்கு இருப்பானை, விரைவில் உடன் கொண்டுபோக வேண்டிய மற்றொருவன் பார்த்து இன்னும் உண்டிலையோ என்றால், உண்டேன் உண்டேன் என்பான், உண்ணாநிற்பானை அவ்வாறு வினாவினாலும், 'உண்டேன் உண்டேன்' என்பான். இங்கே விரைவுபற்றி எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டன. 2.அக்காட்டில் புகின் கூறை பறிகொடுத்தான் , களவு செய்ய நினையின் கை அறுப்புண்டான் என்றவழி, மிகுதிபற்றி எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. கூறை பறிகொடுத்தலும் கை அறுப்புண்ணுதலும் தவறினும் தவறும் ஆதலால் மிகுதி எனப்பட்டன. 3.அறம் செயின் சுவர்க்கம் புக்கான், எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்தது என்றவழித், தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. சுவர்க்கம் புகுதற்கு அறம் செய்தல் காரணம் என்பது உரை அளவையினாலும், மழைபெய்தற்கு எறும்பு முட்டை எடுத்து மேட்டில் ஏறுதல் காரணம் என்பது காட்சி அளவையினாலும் தெளியப்பட்டமையினாலே, தெளிவாயின. [உரையளவை = பிரத்தியட்சப்பிரமாணம். (காட்சியளவை -)] 4. யாம் பண்டு விளையாடுவது இச்சோலை; யாம்பண்டு விளையாடுகிறது இச்சோலை என்ற வழிக், காரணம் இன்றி இயல்பினால் இறந்தகாலம் எதிர்காலமும் நிகழ்காலமும் ஆகச் சொல்லப்பட்டது. 33
|