வினை சார்பு இனம் இடம் மேவி விளங்காப் பல பொருளொரு சொல் = குறித்த பொருளை விளக்கும் வினையும் சார்பும் இனமும் இடமும் பொருந்தி விளங்காத பலபொருள் ஒருசொல்லை , சிறப்பு எடுத்துப் பணிப்பர் = சிறப்புச் சொல்லோடு கூட்டிச் சொல்லுவர் புலவர். எனவே, வினை முதலியவற்றுள் ஒன்றைப் பொருந்தி விளங்கிக் கிடந்த பலபொருள் ஒருசொல்லை வாளா கூறுவர் என்பதாயிற்று. 1. மா என்பது மாமரத்திற்கும் வண்டிற்கும் ஒருசார் விலங்கிற்கும் திருவிற்கும் பொதுவான பல பொருளொருசொல். இப் பொருள்களுள், மாப் பூத்தது, மாக் காய்த்தது என்றவழி, மரம் என்பது வினையால் விளங்கிற்று. மாவீழ் மலர் என்றவழி, வண்டு என்பது சார்பால் விளங்கிற்று. தேர்,கரிமா காலாள் என்ற வழிக், குதிரை என்பது இனத்தால் விளங்கிற்று, மாமறுத்த மார்பன் என்ற வழித், திரு என்பது இடத்தால் விளங்கிற்று. இவை வாளா கூறப்பட்டன. 2. இனி, மா ஏறினான், மாவி யாது என்ற வழிக்,குறித்த பொருள் விளங்காமையால், விளங்கு தற் பொருட்டுப் பாய்மா ஏறினான், மாமரம் ஏறினான் , பாய்மா யாது, மாமரம் யாது எனச் சிறப்புச் சொல்லோடு கூட்டிக் கூறுக. பிறவும் அன்ன. 39
|