ஐகான் இறுமொழி - ஐகார ஈற்றுச் சொற்கள் , வேற்றுமை ஆயின் - வேற்றுமைக்கண் வருமாயின் , ஈற்று அழிவோடும் அம் ஏற்பவும் உள - ஈற்று ஐகாரம் கெடுதலுடனே அம்முச் சாரியை பெற்று முடிவனவும் சில உள. அழிவோடும் என்றமையால் , அழியாமையோடும் அம் ஏற்பவும் உள எனக் கொள்க. வருமெழுத்துச் சொல்லாமையால், நாற்கணத்துள் ஏற்பன கொள்க. 1. வழுதுணை + காய் = வழுதுணங்காய், தாழை + பூ = தாழம்பூ, ஆவிரை + வேர் = ஆவிரம்வேர் என ஈற்று ஐகாரம் கெட்டு அம்முச் சாரியை பெற்றன. 2. புன்னை + கானல் = புன்னையங்கானல், முல்லை + புறவம் = முல்லையம்புறவம் என ஈற்று ஐகாரங் கெடாமல் அம்முச் சாரியை பெற்றன. ஏற்பவுமுள என்றதனால், முல்லைப்புறவம் என வரினும் கொள்க. இது எய்தாதது எய்துவித்தல்.
|