மெய்யீற்றுப் புணரியல்

ணகர னகர வீறுமகர ஈறு

 
220வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும்
அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
வேற்றுமை மப் போய் வலி மெலி உறழ்வும் - வேற்றுமைக்கண் மகர இறுதி கெட வல்லினமானது அவற்றிற்கு இனமாவது மிகுதலும் , அல்வழி உயிர் இடைவரின் இயல்பும் உள - அல்வழிக்கண் உயிரும் இடையினமும் வரின் கெடாது இயல்பாதலும் உளவாம் .

மகரமெய் உயிரும் இடையினமும் வர இயல்பாவது பண்புத்தொகை உவமைத்தொகை இரண்டும் ஒழித்து ஒழிந்த அல்வழிப் புணர்ச்சியில் எனக் கொள்க.

1. குளம் + கரை = குளக்கரை , குளங்கரை என வேற்றுமையில் ஈறு கெட்டு உறழ்ந்தது .

2. மரமடைந்தது , மரம் வலிது எனவும் , வலம் இடம் , நிலம் வானம் எனவும் , உண்ணும் உணவு , ஆளும் வளவன் எனவும் , உண்டன மடியேம், உண்டனம் யாம் எனவும் , அரசனும் அமைச்சனும், புலியும் யானையும் எனவும், எழுவாய்த்தொடர் முதலியன அல்வழியில் உயிரும் இடையினமும் வர ஈறு கெடாது இயல்பாக முடிந்தது.

விணையாலணையும் பெயர் இறுதிமகரமும் தனிக்குறிலைச் சார்ந்த மகரமும், சிறியே மன்பு, சிரியேம் வாழ்வு எனவும், நம் மன்பு, நம் வாழ்வு எனவும், வேற்றுமையிலும் உயிரும் இடையினமும், வர இயல்பாம் எனக் கொள்க.

'மப்போய்' என்றது மேலைச்சூத்திரத்தால் எய்தியது இகந்து படாமைக்காத்தல்; 'வலிமெலி உறழ்வும் ' என்றது "இயல்பினும் விதியினும்" என்னும் சூத்திரத்தால் எய்தியதன் மேறசிறப்புவிதி; 'அல்வழியுயிரிடை வரினியல்பும்' என்றது மேலைச்சூத்திரத்தால் எய்தியது விலகல்.