வேறு இல்லை உண்டு = வேறு , இல்லை , உண்டு என்னும் மூன்று வினைக்குறிப்பு முற்றுக்களும், ஐம்பால் மூவிடத்தன = ஐம்பாலுக்கும் மூவிடத்திற்கும் உரியனவாம். யான் வேறு, யாம்வேறு, நீ வேறு, நீர்வேறு, அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு; இல்லை, உண்டு என்பவற்றையும் மூவிடப் பெயர்களோடும் ஒட்டுக. இல்லை என்பது சிறுபான்மை இல் என நிற்றலும் உண்டு. இனி, மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடித்தல் என்னும் உத்தியால், வேண்டும், தகும், படும் என்னும் சொற்களும் ஐம்பான் மூவிடத்துக்கும் பொதுவாம் எனக் கொள்க. இம்மூன்றும் ஒரு பொருள்சொற்களாய்த் தொழிற்பெயராய்த் தேற்றப் பொருள்பட்டே நிற்கும். அவர் ஓதல் வேண்டும்; நீ போதல்வேண்டும்; யான் உண்ணல் வேண்டும் எனவும், இச் சோறு உண்ணத் தகும்; இவரால் இக்காரியம் செய்யத்தகும் எனவும், வஞ்சரை அஞ்சப்படும்; "கற்றறிந்தோரைத் தலை நிலத்து வைக்கப்படும்" எனவும் வரும். 20
|