பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு வழா நிலை

 
389வேறுவினைப் பல்பொரு டழுவிய பொதுச்சொலும்
வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
வேறுவினைப் பல்பொருள் தழுவிய பொதுச்சொலும் = வெவ்வேறு வினைகளுக்கு உரிய பல பொருள்களையும் ஒருங்கு தழுவி நிற்கும் ஒரு பொதுச்சொல்லும் , வேறு அவற்று எண்ணும் - அவற்றின் சிறப்புச் சொற்களாக எண்ணி நிற்கும் பல சொற்களும் , ஒர் பொதுவினை வேண்டும் = ஒன்றற்கு உரிய சிறப்புவினையை வேண்டாது எல்லாவற்றிற்கும் உரியதோர் பொதுவினையை வேண்டுவனவாம்.


1. அடிசில் என்பது உண்பன தின்பன நக்குவன பருகுவனவற்றிற்கு எல்லாம் பொதுச்சொல் ஆதலால், அடிசில் அயின்றார் அடிசில் மிசைந்தார் என்க, அணி என்பது கவிப்பன கட்டுவன இடுவன தொடுவனவற்றிற்கு எல்லாம் பொதுச்சொல் ஆதலால், அணி அணிந்தார் அணி தாங்கினார் என்க. இயம் என்பது கொட்டுவன ஊதுவனவற்றிற்கு எல்லாம் பொதுச்சொல் ஆதலால், இயம் இயம்பினார் இயம்படுத்தார் என்க. படை என்பது எய்வன எறிவன வெட்டுவன குத்துவனவற்றிற்கு எல்லாம் பொதுச்சொல் ஆதலால், படை வழங்கினார் படைதொட்டார் என்க.

2. சில நாள் சோறும் சிலநாள் மாவும் சிலநாள் பாலும் சிலநாள் நீரும் சிலநாள் சருகும் அயின்றார் அல்லது மிசைந்தார் என்க. முடியும் குழையும் மோதிரமும், நெடுநாணும் துணிந்தார்; பறையும் குழலும் இயம்பினார் , வாளும் வேலும் வழங்கினார் என்க.

38