வேற்றுமை (யுருபுகள்) = ஐம் முதலிய வேற்றுமை உருபுகளும் , வினை (யுருபுகள்) = விகுதிகளும் இடைநிலைகளும் ஆகிய வினை உருபுகளும் , சாரியை (யுருபுகள்) = அன் ஆன் முதலிய சாரியை உருபுகளும் , ஒப்புருபுகள் = போலப் புரைய முதலிய உவம உருபுகளும் , தத்தம் பொருள = பிறவாறு தத்தமக்கு உரிய பொருளை உணர்த்தி வருபவையும் , இசைநிறை = வேறு பொருள் இன்றி இசைநிறையே பொருளாக வருபவையும் , அசை நிலை = அசைநிலையே பொருளாக நிற்பவையும் , குறிப்பு = வெளிப்படையின வரும் இவை போலாது ஒலி , அச்சம் , விரைவு இவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருபவையும் , என் எண் பகுதியின் = என்னும் எட்டுவகையினை உடையனவாய் , தனித்து இயல் இன்றி = தனித்து நடத்தல் இன்றி , பெயரினும் வினையினும் பின்முன் ஒரிடத்து = பெயரின் அகத்தும் வினையின் அகத்தும் அவற்றின் புறமாகிய பின்னும் முன்னும் இவ்விடங்கள் ஆறனுள் ஓரிடத்து , ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது = ஒன்றாயினும் பலவாயினும் வந்து அப்பெயர் வினைகளுக்கு அகத்து உறுப்பாயும் புறத்து உறுப்பாயும் ஒன்றுபட்டு நடக்கும் தன்மையது , இடைச்சொல் = இடைச்சொல் லாகும் . பெயர்ச்சொல் வினைச்சொற்களும் ஆகாது , அவற்றின் வேறும் ஆகாது இடைநிகரனவாய் நிற்றலின் , இடைச் சொல் எனப்பட்டன, தனித்து நடத்தல் இன்றிப் பெயர் வினைகள் இடமாக நடத்தலின் , இடைச்சொல் எனப்பட்டன எனினும் அமையும் . இசைநிறை என்பது வேறுபொருள் உணர்த்தாது செய்யுளில் ஒசையை நிறைத்து நிற்பது . அசைநிலை என்பது வேறுபொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச்சொல்லோடும் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது. [அசைத்தல் = சார்த்துதல்] 1. குழையன் என்புழிப் , பெயரின் அகத்து உறுப்பாய் விகுதி இடைச்சொல் ஒன்று வந்தது ,தச்சிச்சி , நிலத்தினன் என்புழிப் , பெயரின் அகத்து உறுப்பாய் முறையே இடைநிலையும் விகுதியும் , இடைநிலையும் சாரியையும் விகுதியுமாகிய இடைச்சொற்கள் பல வந்தன. 2. உண்ணாய் என்புழி வினையின் அகத்துறுப்பாய் விகுதி இடைச்சொல் ஒன்று வந்தது. நடந்தான் , நடந்தனன் என்புழி , வினையின் அகத்துறுப்பாய் முறையே இடைநிலையும் விகுதியும் , இடைநிலையும் சாரியையும் விகுதியுமாகிய இடைச்சொற்கள் பல வந்தன. 3. அதுமன் , கொன்னூர் என்புழிப் , பெயரின் புறத்து உறுப்பாய்ப் பின்னும் முன்னும் ஒன்று வந்தது. அது மற்றம்ம , இனி மற்றொன்று என்புழிப் , பெயரின் புறத்துறுப்பாய்ப் பின்னு முன்னும் பல வந்தன . 4. வந்தானோ , ஐயோ இறந்தான் என்புழி , வினையின் புறத்து உறுப்பாய்ப் பின்னும் முன்னும் ஒன்று வந்தது , கொன்றான் கூகூ , சீசீ போ என்புழி , வினையின் புறத்து உறுப்பாய்ப் பின்னும் முன்னும் பல வந்தன . 1
|