பதவியல்

இடைநிலை
காலம்காட்டும் விகுதி

 
145றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவுந்
தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு
கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னேவல்
வியங்கோ ளிம்மா ரெதிர்வும் பாந்தஞ்
செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும்
எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
றவ்வோடு உகர உம்மை நிகழ்பு அல்லவும் - றகர மெய்யோடு கூடிய உகர விகுதியும் உம் விகுதியும் இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் , தவ்வொடு (உகர உம்மை) இறப்பும் எதிர்வும் - தகரமெய்யோடு கூடிய உகர விகுதியும் உம் விகுதியும் இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் , டவ்வொடு (உகர உம்மை) கழிவும் - டகர மெய்யோடு கூடிய உகர விகுதியும் உம் விகுதியும் இறந்த காலத்தையும் , கவ்வோடு ( உகர உம்மை) எதிர்வும் - ககர மெய்யோடு கூடிய உகர விகுதியும் உம் விகுதியும் எதிர் காலத்தையும் , மின் ஏவல் வியங்கோள் இ மார் எதிர்வும் - மின் விகுதியும் மற்றை முன்னிலை ஏவல் விகுதிகளும் வியங்கோள் விகுதிகளும் இகர விகுதியும் மார் விகுதியும் , எதிர்காலத்தையும் ; ப அந்தம் செலவொடு வரவும் - பகர விகுதி இறந்தகாலத்தையும், எதிர்காலத்தையும் , செய்யும் நிகழ்பு எதிர்வும் - செய்யுமென்னும் வாய்பாட்டு முற்று விகுதி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் , எதிர்மறை மும்மையும் - எதிர்மறை ஆகார விகுதி மூன்று காலத்தையும் , ஏற்கும் - ஏற்று வரும் ஈங்கு - மேலைச் சூத்திரத்து இவை சிலவில என்றவைகளுள் .

சென்று , சென்றும் என்பன. முறையே சென்றேன், சென்றோம் எனப் பொருள்பட்டு இறந்தகாலம் காட்டின.

சேறு , சேறும் என்பன முறையே செல்வேன், செல்வேம் எனப் பொருள்பட்டு எதிர்காலம் காட்டின .

வந்து, வந்தும் என்பன முறையே வந்தேன், வந்தேம் எனப் பொருள்பட்டு இறந்தகாலம் காட்டின.

வருது, வருதும் என்பன முறையே வருவேன், வருவேம் எனப் பொருள்பட்டு எதிர்காலம் காட்டின.

உண்டு, உண்டும் என்பன முறையே உண்டேன், உண்டேம் எனப் பொருள்பட்டு இறந்தகாலம் காட்டின.

உண்கு, உண்கும் என்பன முறையே உண்பேன், உண்பேம் எனப் பொருள்பட்டு எதிர்காலம் காட்டின.

உண்மின், உண்ணீர், உண்ணும், உண்ணாய் என மின், ஈர், உம், ஆய் என்னும் ஏவல் விகுதிகளும்.

உண்க, வாழிய, வாழியர் எனக் க, இய, இயர் என்னும் வியங்கோள் விகுதிகளும்,

சேறி என இகர விகுதியும் ,

உண்மார் என மார் விகுதியும் எதிர்காலம் காட்டின.

சேறி என்பது செல்வாய் எனவும் உண்மார் என்பது உண்பார் எனவும் பொருள்படும்.

உண்ப என்பது உண்டார் எனவும் உண்பார் எனவும் பொருள்பட்டு இறந்தகாலமும் எதிர்காலமும் காட்டின.

உண்ணும் என்னும் செய்யுமென் வாய்பாட்டு முற்று நிகழ்காலமும் எதிர்காலமும் காட்டிற்று.

உண்ணா என்னும் எதிர்மறை முக்காலமும்காட்டிற்று.

இகர விகுதி எழுத்துப்பேறாய் வரும் தகர மெய்யின் மேல் ஏறி வரும் , அவ்விகுதி சென்றி, செல்லாநின்றி என இறந்த கால இடைநிலை, நிகழ்கால இடைநிலைகளோடு கூடி வரும் போது அவை காலங்காட்டால் ஆற்றான் காலங் காட்டாது நிற்கும்.

இவை சிலவில என்றவைகளுள்ளே , காலம்காட்டும் விகுதிகளை மாத்திரம் சொல்லிக் காலங்காட்டும் பகுதியையும் பிற இடைநிலையையும் சொல்லாமையால், அவை சிறுபான்மையின , வந்த இடங்களில் கண்டுகொள்க என்று ஆயிற்று. அவை வருமாறு :-

கு, டு, று, என்னும் மூன்றுயிர்மெய் ஈற்றுச் சில குறிலிணைப் பகுதிகள் தம் ஒற்று இரட்டி இறந்தகாலம் காட்டும்.

புக்கான், நக்கான் எனவும்,
தொட்டான், விட்டான் எனவும்
உற்றான், பெற்றான் எனவும் வரும்.

யகர இடைநிலை இறந்தகாலமும், ஆகிடந்து, ஆவிருந்து என்னும் இரண்டு இடை நிலைகளும் நிகழ்காலமும்காட்டும்.

போயது எனவும்,

உண்ணாகிடந்தான் , உண்ணாவிருந்தான் எனவும் வரும்.

இசின் என்பது இறந்தகால இடைநிலையாயும் , மகர மெய்யும் மன் என்பதும் எதிர்கால இடைநிலைகளாயும் செய்யுளில் வரும்.

என்றிசினோர் எனவும்,

என்மர், என்மனார் எனவும் வரும்.

ஈங்கே என்ற மிகையால் வருதி என இகர விகுதி நிகழ்காலம் காட்டுதலையும் பெயரெச்ச வினையெச்சங்களில் இடைநிலையின்றி விகுதி காலம் காட்டுதலையும் அமைத்துக் கொள்க.

பகுதி விகுதி என்னும் சூத்திரம் முதல் இச்சூத்திரம் வரையும் பகுபதங்களை மேலோர் முடித்தவாறு முடித்துக் காட்டினமையால், முடித்துக் காட்டல் என்னும் உத்தி . முன்னைத் தமிழ் நூல்களில் இல்லாதவைகளை இவ்வாசிரியர் தாமே பகாப்பதம் பகுபதம் என முன்னே நாட்டி இச் சூத்திரம் வரையும் அவைகளுக்கு இலக்கணம் கூறி நிறுத்தினமையால், தாஅனாட்டித்தனாதுநிறுப்பு என்னும் மதம் .