ஐ ஈற்று உடைக் குற்றுகரமும் உள - ஐகாரச் சாரியையை இறுதியிலே பெற்று வரும் மென்தொடர்க் குற்றியலுகர மொழிகளும் சில உளவாம். மேலைச் சூத்திரத்தைச் சார வைத்தமையால், இதுவும் மென்தொடர் என்பது பெற்றாம். வரும் எழுத்தைச் சொல்லாமையால், நாற்கனமும் கொள்க. பண்டு+காலம்=பண்டைக்காலம், இன்று+நாள்=இற்றை நாள் எனவும்; அன்று+கூலி=அற்றைக் கூலி, இன்று+நலம் = இற்றை நலம் எனவும் இருவழியும் வரும். மேலைச் சூத்திரத்தைச் சார வைத்தாரேனும்' ஐயீற்றுடைக் குற்றுகரம் எனப் பொதுப்படக் கூறினமையால், நேற்று +பொழுது=நேற்றைப்பொழுது எனவும், நேற்று +கூலி=நேற்றைக் கூலி எனவும் இருவழியும் வன்தொடர் ஐகாரச் சாரியை பெறுதலும் , ஐயீற்றுடைக் குற்றுகரம் என உடைமை ஆக்கிக் கூறினமையால், வருமொழி நோக்காது , ஒன்று-ஒற்றை, இரண்டு-இரட்டை என ஒரு மொழியாக நின்று ஐகாரம் பெறுதலும், ஓராண்டு-ஓராட்டை , ஈராண்டு-ஈராட்டை எனத் தொடர்மொழியாக நின்று ஐகாரம் பெறுதலும் கொள்க. சில மென்தொடர்க் குற்றியலுகர மொழிகள் ஐகாரச் சாரியை பெறும் என்றது எய்தாதது எய்துவித்தல் ; வன் தொடராதலோடு ஐகாரச் சாரியையும் பெறும் என்றுது எய்தாதது எய்துவித்தல் ; வன்தொடர் ஆதலோடு ஐகாரச்சாரியையும் பெறும் என்று 'மென்தொடர் மொழி' என்னும் மேலைச் சூத்திரத்தால் எய்தியதன்மேல் சிறப்புவிதி.
|