ஐந்தன் ஒற்று - இறுதி உயிர்மெய் கெட நின்ற ஐந்து என்னும் எண்ணினது நகர மெய் , அடைவதும் = வரும் மெய்யாகத் திரிதலும் , இனமும் = வரும் மெய்க்கு இனமாகத் திரிதலும் , கேடும் - கெடுதலுமாம் (ஏற்புழி-ஏற்குமிடத்து) . ஏற்புழி என்றதனால், நகர மெய் வரும் மெய்யாகத் திரிவது மெல்லினம் வரும் இடத்து எனவும் , இனமாகத் திரிவது வல்லினம் வரும் இடத்து எனவும், கெடுவது உயிரும் இடையினமும் வருமிடத்து எனவும் கொள்க. ஐம்மூன்று, ஐஞ்ஞாண் எனவும், ஐம்பது, ஐங்கழஞ்சு, ஐங்கலம், ஐம்பொறி எனவும், ஐயொன்று எனவும், ஐவட்டி எனவும் வரும். அடைவதும் இனமும் என்றமையின், அருத்தாபத்தியால் நகர தகரங்கள் வரும் இடத்து ஐந்தூறு ; ஐந்தூணி என நகர மெய் தன்னியல்பில் நிற்றலும் கொள்க. இன்னும், ஏற்புழி என்றதனால், வகரம் வருமிடத்து ஐவ்வண்ணம் என முடிதலே அன்றி, ஐவ்வண்ணம் என நகர மெய் வரும் மெய்யாகத் திரிந்து முடிதலும் கொள்க.
|