பெயரியல்

வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை

 
299ஐந்தா வதனுரு பில்லு மின்னும்
நீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஐந்தாவதன் உருபு இல்லும் இன்னும்-ஐந்தாம் வேற்றுமையின் உருபாவன இல்லும் முன் சொல்லப்பட்ட இன்னுமாம் , பொருள்-அவ்வுருபுகளின் பொருள்களாவன , நீங்கல்-நீக்கப்பொருளும், ஒப்பு-ஒப்புப் பொருளும், எல்லை-எல்லைப் பொருளும், ஏது-ஏதுப்பொருளுமாகிய அவ்வுருபுகளை ஏற்ற பெயர்ப்பொருள்கள் வேறுபட்ட இந்நான்குமாம்.

மலையின் வீழருவி...... நீக்கப்பொருள்.
காக்கையிற் கரிது களம்பழம் ...... ஒப்புப்பொருள்.
மதுரையின் வடக்குச் சிதம்பரம்..... எல்லைப்பொருள்.
கல்வியிற் பெரியன் கம்பன்......ஏதுப்பொருள்.

நீக்கப் பொருளாவது, பிரிவை உண்டாக்கும் தொழில் இன்றிப் பிரிவைமாத்திரம் தன் இடத்துடைய பொருளாம்.

மலையின் வீழருவி என்புழி, அருவியின் வீழ்ச்சி பிரிவை உண்டாக்கும் தொழில் அது தன்னிடத்து இல்லாமல் அவ்வீழ்ச்சியால் ஆகிய பிரிவு ஒன்றையே தன்னிடத்து உடையது மலை ஆதலால் மலை நீக்கப்பொருள்.

ஒப்புப் பொருளாவது, உவமேயப் பொருளிலும் தன்னிலும் இருக்கின்ற பொதுத் தன்மையால் உவமானமாகும் பொருளாம் உவமேயம், புகழ்பொருள் என்பன ஒரு பொருட்சொற்கள். காக்கையிற் கரிது களம்பழம் என்புழிக், களம்பழம் உவமேயம்; உவமேயத்திலும் தன்னிலும் உள்ள பொதுத்தன்மை கருமை, அதனால் உவமானம் ஆகிய பொருள் காக்கை ஆதலால் காக்கை ஒப்புப்பொருள்.

எல்லைப் பொருளாவது,அறியப்படாத பொருளினது திசை அளவு, வழி அளவு, கால அளவு, பண்பு முதலியவற்றைக் குறிப்பித்தற்கு எல்லையாக நிற்கும் பொருளாம்.

1. மதுரையின் வடக்குச் சிதம்பரம் என்புழி, அறியப்படாத சிதம்பரத்தினது திசையைக் குறிப்பித்தற்கு எல்லையாக நிற்பது அறியப்பட்ட பொருளாகிய மதுரை ஆதலால், மதுரை எல்லைப்பொருள்.

2. கச்சியின் திருத்தணிகை முக்காவதம் என்புழி அறியப்படாத திருத்தணிகையினது வழியளவை அறிவித்தற்கு எல்லையாக நிற்பது , அறியப்பட்ட பொருளாகிய கச்சி ஆதலால், கச்சி எல்லைப்பொருள்.

3. சாத்தனில் இரண்டாண்டு மூத்தவன் கொற்றன் என்புழி, அறியப்படாத கொற்றனுடைய பிராயத்தைக் குறிப்பித்தற்கு எல்லையாக நிற்கும் பொருள் அறியப்பட்ட சாத்தன் ஆதலால் சாத்தான் எல்லைப் பொருள்.

4.அரசரிற் பெரியர் அந்தணர்; ஆவின் இழிந்தது மேதி என்புழி அறியப்படாத அந்தணரும் மேதியுமாகிய பொருள்களின் உயர்வு தாழ்வுகளைக் குறிப்பித்தற்கு எல்லையாக நிற்கும் பொருள்கள் அறியப்பட்ட அரசரும் , ஆவும் ஆதலால், அரசரும் ஆவும் எல்லைப்பொருள்கள். இவ்வுயர்வு தாழ்வுகளை நீக்கப்பொருள் என்பாரும் உளர்.

ஏதுப்பொருளாவது, ஒரு பொருளின் பெருமை முதலியவற்றிற்கு ஏதுவாகும் பொருளாம். கல்வியிற் பெரியன் கம்பன் என்புழிக் , கம்பனுடைய பெருமைக்கு ஏதுக் கல்வி ஆதலால் கல்வி ஏதுப்பொருள்.

இன்னும், மாயையில் தோன்றிய துலகம் என முதற்காரணப் பொருளிலும், மண்ணுலகின் வேறு விண்ணுலகம் என வேற்றுமைக்கு எதிர்ப்பொருளிலும் , பாவத்தின் வெறுக்கின்றான் என , விடயப் பொருளிலும், ஐந்தனுருபு வரும் எனக்கொள்க.

நீக்கப்பொருளிலும், எல்லைப் பொருளிலும், இன் இல் உருபுகளின்மேல், நின்று, இருந்து என்பவை, உம் பெற்றும் பெறாதும் சொல் உருபுகளாக வரும்.

1. ஊரினின்றும் போயினான்; ஊரினின்று போயினான் , ஊரிலிருந்தும் போயினான், ஊரிலிருந்து போயினான் - இவை நீக்கப் பொருள்.

2. காட்டினின்றும் ஊர்காவதம் ;காட்டினின்றூர் காவதம்; காட்டிலிருந்து மூர்காவதம், காட்டிலிருந் தூர்காவதம் - இவை எல்லைப்பொருள்.

42