பொதுவியல்

தொகைநிலைத் தொடர்மொழி
அன்மொழித்தொகை

 
369ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஐந்தொகை மொழிமேல் = வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத் தொகைநிலைத் தொடர் மொழிகளுக்கும் புறத்தே , பிறதொகல் - அவை அல்லாத பிற மொழிகளாகிய உருபுகள் தொக்கு வருவன , அன்மொழி = அன்மொழித் தொகைகளாம்.

1. பூங்குழல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பூவை உடைய குழலினை உடையாள் என விரியும்.

பொற்றொடி என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது பொன்னல் ஆகிய தொடியினை உடையாள் என விரியும்.

கவி இலக்கணம் என்பது நான்காம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட நூல் என விரியும்.

பொற்றாலி என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை இது பொன்னின் ஆகிய தாலியினை உடையாள் என விரியும்.

கிள்ளிகுடி என்பது ஆறாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை இது கிள்ளியினது குடியிருக்கும் ஊர் என விரியும்.

கீழ்வயிற்றுக் கழலை என்பது ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது கீழ்வயிற்றின் கண் எழுந்த கழலைபோல்வான் என விரியும்.

2. தாழ்குழல் என்பது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது தாழ்ந்த குழலினை உடையாள் என விரியும்.

3.கருங்குழல் என்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது கருமையாகிய குழலினை உடையாள் என விரியும்.

4.துடியிடை என்பது உவமத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது துடிபோலும் இடையினை உடையாள் என விரியும்.

5.தகரஞாழல் என்பது உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது தகரமும் ஞாழலும் கலந்து உண்டாகிய சாந்து என விரியும்.

தகரஞாழன்முலை என்பது பன்மொழித் தொடர். இது தகரமும் ஞாழலும் கூடி உண்டாகிய சாந்தை அணிந்த முலையினையுடையாள் என விரியும்.

இனிப் பன்மொழித்தொடரில் அறுவகைத் தொகைகளும் கலந்து தொகுமாறு: - திகழ் செவ்வான் மதித் திருமுகப் பூங்குழல் என வரும். இவை, விரியும் இடத்துத், திகழ்ந்த செம்மையாகிய வானத்தின்கண் மதிபோலும் திருமுகத்தினையும் பூவை அணிந்த குழலினையும் உடையாள் என

18