பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
திணையோடு வினாவிடையும் பாலோடு வினாவிடையும் வழுவாமல் காத்தல்

 
376ஐயந் திணைபா லவ்வப் பொதுவினும்
மெய்தெரி பொருண்மே லன்மையும் விளம்புப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
திணை பால் ஐயம் அவ்வப் பொதுவினும் = திணை ஐயத்தையும் பால் ஐயத்தையும் அவ்அவற்றின் பொதுச்சொல்லாலும் , மெய் தெரி பொருண்மேல் அன்மையும் = துணிந்த பொருள்மேல் அல்லாத தன்மையை வைத்தும் , விளம்புப - சொல்லுவர் புலவர்.

வினா. 1. ஒரு பொருளைக் கண்ட இடத்துக் குற்றியோ மகனோ என்று திணையில் ஐயம் தோன்றிய போது, குற்றியோ மகனோ அவ்விடத்துத் தோன்றுகின்ற உரு எனப் பொதுச்சொல்லால் வினாவுக. குற்றிக்கும் மகனுக்கும் உருப் பொதுப்பட நிற்றலால், உருப் பொதுச்சொல் ஆயிற்று, [குற்றி - மரக்கட்டை. ] இங்கே உருவின் பரியாய மெல்லாம் கொள்க. இங்ஙனம் கூறாது, தோன்றா நின்றது, தோன்றா நின்றான் எனச் சிறப்புச் சொல்லால் கூறின் திணைவழுவும் வினாவழுவுமாம்.

2. ஆண்மகனோ பெண்மகளோ என உயர் திணையில் பால் ஐயம் தோன்றியபோது, ஆண்மகனோ பெண்மகளோ அங்கே தோன்றுகிறவர் எனப் பொதுச் சொல்லால் வினாவுக. ஆண்பெண் இரண்டல்லது பலர் பாலென வேறொன்று இன்றி அவ்விரு பாற்கும் பொதுப்பட நிற்றலால் தோன்றுகிறவர் என்பது பொதுச்சொல் ஆயிற்று. இங்ஙனம் கூறாது. தோன்றுகிறவன். தோன்றுகிறவள் எனச் சிறப்புச் சொல்லால் கூறின் பால்வழுவும் வினாவழுவும் ஆம்.

3. ஒன்றோ பலவோ என அஃறிணையில் பால் ஐயம் தோன்றியபோது, ஒன்றோ பலவோ இச்செய் புக்க பெற்றம் எனப் பொதுச்சொல்லால் வினாவுக. பெற்றம் என்பது பால்பகா அஃறிணைப் பெயராய் அத்திணை இருபாற்கும் பொதுப்பட நிற்றலால் பொதுச்சொல் ஆயிற்று, [செய் = வயல், பெற்றம் என்பது பசுவும் காளையும். ] இங்ஙனம் கூறாது, புக்கது, புக்கன எனச் சிறப்புச் சொல்லால் கூறின் பால்வழுவும் வினாவழுவுமாம். விடை 1.குற்றியோ மகனோ என்று ஐயுற்றபோது, துணிந்த பொருள் குற்றி எனின், மகன் அன்று எனவும், மகன் எனில் குற்றி அல்லன் எனவும், துணிந்த பொருள்மேல் மற்றொன்று அல்லாத தன்மையை வைத்துக் கூறுக.

2. ஆண்மகனோ பெண்மகளோ என்று ஐயுற்ற போது, துணிந்த பொருள் ஆண்மகன் எனின் பெண் மகள் அல்லன் எனவும், பெண்மகள் எனின், ஆண்மகன் அல்லள் எனவும் துணிந்த பொருள்மேல் மற்றொன்று அல்லாத தன்மையை வைத்துக் கூறுக.

3. ஒன்றோ பலவோ என்று ஐயுற்றபோது, துணிந்த பொருள் ஒன்று எனின், பலஅன்று எனவும், பலஎனின், ஒன்று அல்ல எனவும் துணிந்த பொருள்மேல் மற்றொன்று அல்லாத தன்மையை வைத்துக் கூறுக

மகன் அன்று என்பதை மகனின் அன்று என ஐந்தாம் வேற்றுமைப் புணர்ச்சி என்பாரும் உளர். அதுபோல் வரும் நீயல்லன் என்பதும் அங்ஙனம் விரித்தல் கூடாமையால், அல்வழிப் புணர்ச்சியுள் எடுத்து விதந்த பதினான்கின் புறத்தாய் அடங்கும் என்க. ஒழிந்த ஐந்து உதாரணங்களும் அவ்வாறே ஆம் என்க.

மகன் அல்லன் அவ்உருக்குற்றி எனக் கூறின் சொல் பல்குதல் என்னும் விடைவழுவாம்.

25