எழுத்தியல்

பெயர்
இன எழுத்து

 
71ஐ ஒள இ உச் செறிய முதலெழுத்
திவ்விரண் டோரின மாய்வரன் முறையே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஐ ஒள இ உச் செறிய - இனமில்லாத ஐகார ஒளகாரங்கள் ஈகார ஊகாரங்களுக்கு இனமாகிய இகர உகரங்களைத் தமக்கும் இனமாகப் பொருந்த , முதலெழுத்து இவ்விரண்டு ஓரினம் ஆய் வரல் முறை - முதல் எழுத்துக்கள் இவ் இரண்டு ஓரினமாய் வருதன் முறை , ஆதலால் , அவை இன எழுத்தெனப் பெயர்பெறும் .

சுருங்கச் சொல்லல் என்னும் அழகு பற்றி முதல் எழுத்தெனப் பொதுப்படக் கூறினார் ; ஏற்புழிக் கோடல் என்பதனால் , இவ்விரண்டு ஓர் இனமாய் வருதல் இடையினம் ஒழிந்த மற்றவைகளுக்கே கொள்க .

அ-ஆ , இ-ஈ , உ-ஊ , எ-ஏ , ஐ-இ , ஒ-ஓ , ஒள-உ எனவும் க-ங , ச-ஞ , ட-ண , த-ந , ப-ம , ற-ன எனவும் இவ்விரண்டு ஓரினமாய் வந்தமை காண்க .