னஃகான் கிளைப்பெயர் = னகரத்தை இறுதியிலுடைய சாதிப்பெயர் , இயல்பும் = வல்லினம் வர ஈறு திரியாது இயல்பாதலும் , அஃகான் அடைவும் - அகரச் சாரியை பெறுதலும் , வேற்றுமை பொருட்கு ஆகும் - வேற்றுமைப் பொருள் புணர்ச்சிக்கண் ஆகும் . எயின்குடி , எயினக்குடி, சேரி , தோட்டம் , பாடி என வரும் . [ எயின் - வேட்டுவச்சாதி] 'பொருட்கே' என்ற மிகையால் ,எயின மரபு , எயின வாழ்வு , எயினவணி என மற்றைக் கணம் வரினும் அகரச் சாரியை பெறுதலும் , எயினக் கன்னி , எயினப் பிள்ளை , எயின மன்னன் என அல்வழியில் அகரச் சாரியை பெறதலும் கொள்க . வேற்றுமைப் பொருட்கு இயல்பு என்றது " ண ன வல்லினம் வரட் டறவும் " என எய்தியது விலக்கல் ; அஃகான் அடைவு , என்றது பிறிது விதி வகுத்தல் .
|