ஒரு மொழி மூவழிக் குறைதலும் - ஒரு சொல்லினுடைய முதல் , இடை , கடை என்னும் மூன்றில் ஓரிடத்துக் குறைந்து வருதலும் , அனைத்து - அச் செய்யுள் விகாரமாம் . " மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி " - இங்கே தாமரை எனற்பாலது மரை என முதற் குறைந்து நின்றது . " வேதின வெரிநின் ஓதி முதுபோத்து " - இங்கே ஓந்தி எனற்பாலது ஓதி என இடைக் குறைந்து நின்றது . " நீலுண் துகிலிகை கடுப்ப " - இங்கே நீலம் எனற் பாலது நீல் எனக் கடைக் குறைந்து நின்றது . உரையிற்கோடலால் , விதி இன்றி வருவனவாகிய புணர்ச்சியில் விகாரங்களும் கொள்க . அவை தோன்றல் , திரிதல் , கெடுதல் , நீளல் , நிலைமாறுதல் என்பனவாம் . யாது - யாவது - இது தோன்றல் . மாகி-மாசி , கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு , உயர்திணை மேல - உயர்திணை மேன - இவை திரிதல் . யாவர் - யார் , யார் - ஆர் , யானை - ஆனை , யாடு = ஆடு , யாறு - ஆறு - இவை கெடுதல் . பொழுது - போழ்து , பெயர் - பேர் - இவை நீளல் . வைசாகி - வைகாசி , மிஞிறு - ஞிமிறு , சிவிறி - விசிறி , தசை - சதை - இவை எழுத்து நிலைமாறுதல் . கண்மீ = மீகண் , இல்வாய் = வாயில் , நகர்ப்புறம் = புறநகர் -- இவை சொல் நிலை மாறுதல் .
|