ஒன்றன் புள்ளி ரகரம் ஆக - ஈற்றுயிர்மெய் கெட நின்ற ஒன்று என்னும் எண்ணினது னகர மெய் ரகர மெய்யாக , இரண்டன் ஒற்று உயிர்ஏக - இரண்டு என்னும் எண்ணினது ணகர மெய்யும் ரகரத்தை ஊர்ந்து நின்ற அகர உயிரும் கெட , உவ் வரும் - அவ்விரண்டு ரகர மெய் மேலும் உகரமும் வரும் - ( ஏற்புழி - ஏற்குமிடத்து . ) ஏற்புழி என்றதனால் , ரகர மெய் உகரம் பெறுவது மெய்வரின் எனவும் , உயிர் வரின் உகரம் பெறா எனவும் கொள்க . ஒருபது , இருபது , ஒருகழஞ்சு , இருகழஞ்சு , ஒருநாழி , இருநாழி , ஒருவகை , இருவகை எனவும் , ஓரொன்று , ஈரொன்று , ஓரெடை , ஈரெடை , ஓருழக்கு ,ஈருழக்கு , ஓரிலை ஈரிலை எனவும் வரும் . இன்னும் , ஏற்புழி என்றதனால் , ஆயிரம் வரு மிடத்து , ஓராயிரம் , ஈராயிரம் என முடிதலே அன்றி , ஓராயிரம் , ஈராயிரம் என முதல் நீளாது முடிதலும் , யகரம் வருமிடத்து ஒரு யானை , இரு யானை என முடித்தலே அன்றி , ஓர் யானை , ஈர் யானை என உகரம் பெறாது முதல் நீண்டு முடிதலும் கொள்க .
|