உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
194ஒன்பா னொடுபத்து நூறு மொன்றின்
முன்னதி னேனைய முரணி யொவ்வொடு
தகர நிறீஇப்பஃ தகற்றி னவ்வை
நிரலே ணளவாத் திரிப்பது நெறியே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின் -ஒன்பதுடனே பத்து என்பதும் நூறு என்பதும் வந்து புணருமாயின் , முன்னதின் ஏனைய முரணி - முன்னதாகிய நிலை மொழியினின்றும் மற்றை வருமொழிகளாகிய பத்தையும் நூற்றையும் முறையே நூறு எனவும் ஆயிரம் எனவும் திரித்து; ஒவ்வொடு தகரம் நிறீஇ = நிலைமொழி முதலிலுள்ள ஒகர உயிரோடு தகர மெய்யை அதற்கு ஆதாரமாக நிறுத்தி , பஃது அகற்றி - அந்நிலைமொழி இறுதியிலுள்ள பஃதைக் கெடுத்து , னவ்வை நிரலே ண ள ஆத்திரிப்பது நெறி - அம் மொழி முதற்கு அயல் நின்ற னகர மெய்யை முறையே ணகர மெய்யாகவும் ளகர மெய் யாகவும் திரிப்பது முறையாகும்.

நெறியேஎன்ற இலேசானே; தனிக் குறில் முன்னொற்று இரட்டித்தலும் கொள்க.

1. ஒன்பது + பத்து = (1) ஒன்பது நூறு (2) தொன்பது நூறு (3) தொன் நூறு (4) தொண் நூறு (5) தொண்ணூறு.

2. ஒன்பது + நூறு = (1) ஒன்பது ஆயிரம் (2) தொன்பது ஆயிரம் (3) தொன் ஆயிரம் (4) தொள் ஆயிரம் (5) தொள்ளாயிரம். இது தொளாயிரம் என இக்காலத்து மருவியது.

பஃதகற்றி என்பதனோடு பொருந்த ஒன்பஃதனோடு என்னாது ஒன்பானோடு என்றமையால், ஒன்பது நின்று புணரினும் இவ்விதியே பெறும் என்றறிக .