உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
196ஒருபஃ தாதிமுன் னொன்று முதலொன்பான்
எண்ணு மவையூர் பிறவு மெய்தின்
ஆய்த மழியவாண் டாகுந் தவ்வே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒருபஃது ஆதி முன் - ஒருபஃது முதலாகிய எட்டு எண்களின் முன்னும் , ஒன்று முதல் ஒன்பான் எண்ணும் - ஒன்று முதலாகிய ஒன்பது எண்களும் , அவை ஊர் பிறவும் எய்தின் - அவ்வெண்களை ஊர்ந்த மற்றவையும் வந்து புணருமாயின் , ஆய்தம் அழிய த ஆண்டு ஆகும் = நிலை மொழியிலே நின்ற ஆய்தம் கெட இயல்பாகிய தகரம் அவ்வாய்தம் நின்ற இடத்து வரும்.

ஒருபத்தொன்று, இருபத்தொன்றே காலேயரைக்கால், முப்பத்தொரு கழஞ்சு, எண்பத்தெண் கலனே தூணி, எண்பத்தொன்பதி யாண்டு என வரும், மற்றவைகளும் இப்படியே.

ஆய்தம் கெடத் தகரம் வரும் என்றமையின் அருத்தாபத்தியால் , ஆய்தம் இல்லாத ஒருபது முதலானவைகளும் தகரம் பெறும் என்றார் ஆயிற்று.