உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
197ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி
எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின்
ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்றும்
ஏற்ப தேற்கு மொன்பது மினைத்தே
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒன்று முதல் ஈரைந்து ஆயிரம் கோடி எண் -ஒன்று முதலிய பத்தும் ஆயிரமும் கோடியுமாகிய எண்ணுப் பெயரும் , நிறை - நிறைப் பெயரும் , அளவும் - அளவுப் பெயரும் , பிற வரின் - பிற பெயரும் வந்து புணருமாயின் , பத்தின் ஈற்று உயிர்மெய் கெடுத்து - நிலைமொழியாகிய பத்தினது இறுதியிலுள்ள தகர உயிர் மெய்யை அழித்து , இன்னும் இற்றும் ஏற்பது ஏற்கும் - இன் சாரியை ஆயினும் இற்றுச் சாரியை ஆயினும் அவ்விடத்திற்கு ஏற்பது ஏற்று நிற்கும். ஒன்பதும் இனைத்து = ஒன்பது என்னும் நிலை மொழியும் இப்படியே எண்ணுப் பெயர் முதலானவை வந்து புணருமாயின் இன்னாயினும் இற்றாயினும் அவ்விடத்திற்கு ஏற்பது ஏற்று நிற்கப்பெறும்.

பதினொன்று , பதின்மூன்று , பதினாயிரம், பதின்கழஞ்சு, பதின்கலன், பதின்மடங்கு எனவும்,

பதிற்றொன்று , பதிற்றிரண்டு, பதிற்றுமூன்று, பதிற்றுக்கோடி, பதிற்றுத்தூணி, எனவும்,

ஒன்பதினாயிரம், ஒன்பதின் கழஞ்சு, ஒன்பதின் கலம், ஒன்பதின் மடங்கு எனவும்,

ஒன்பதிற்றொன்று ஒன்பதிற்றிரண்டு, ஒன்பதிற்றுக்குறுணி எனவும் வரும்

மற்றவைகளும் இப்படியே, பதினொன்று - உம்மைத் தொகை; பதிற்றொன்று - பண்புத்தொகை.

"ஏற்ப தேற்கும்" என்றதனால், பத்துக்கோடி, ஒன்பது கோடி எனப் பொதுவிதிப்படியே முடிந்து நிற்றலும் கொள்க.