ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் இரட்டின் - ஒன்பதென்னும் எண் ஒன்றனையும் ஒழித்து நின்ற ஒன்று முதல் பத்து ஈறாகிய ஒன்பது எண்ணினையும் இரட்டித்துச் சொல்லின் , முன்னதின் முன் அல ஓட = நிலைமொழியினது முதலெழுத்து அல்லாதவைகள் எல்லாம் கெட , உயிர்வரின் வவ்வும் - உயிர் முதலான எண் வரின் வகர மெய்யும் , மெய்வரின் வந்ததும் = மெய் முதலான எண் வரின் வந்த மெய்யும் , மிகல் நெறி = மிகுதல் முறையாம். ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந் நான்கு, ஐவைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ் வெட்டு, பப்பத்து என வரும். நெறி என்றமையால், நந்நான்கு என நான்கிற்குக் குறுக்கமும் ஒரோவொன்று, ஒன்றொன்று, கழக்கழஞ்சு என இரட்டித்தலும், இன்னும் குற்றியலுகரப் புணர்ச்சியுள் அடங்காதனவும் கொள்க.
|