5. உருபு புணரியல்

1. உருபுகள்எட்டு உருபுகளும் சாரும் இடவகையால்
இத்தனையாம் என்பது

 
240ஒருவ னொருத்தி பலரொன்று பலவென
வருபெய ரைந்தொடு பெயர்முத லிருநான்
குருபு முறழ்தர நாற்பதா முருபே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என வரு பெயர் ஐந்தொடு - ஒருவனும் ஒருத்தியும் பலரும் ஒன்றும் பலவும் என்று கருத வரும் ஐந்து பெயரோடும் , பெயர் முதல் இரு நான்கு உருபும் உறழ்தர - எழுவாய் வேற்றுமையான பெயர் முதல் விளி ஈறாக நின்ற எட்டு உருபு களையும் பெருக்க , உருபு நாற்பது ஆம் - வேற்றுமை உருபுகள் நாற்பதாகும் .

நம்பி , சாத்தி , மக்கள் , மரம் , மரங்கள் என்னும் இவற்றுள் , நம்பி , நம்பியை , நம்பியால் , நம்பிக்கு , நம்பியின் , நம்பியது , நம்பிகண் , நம்பீ என ஒருவன் என்னும் வாய்பாட்டு உயர் திணை ஆண்பால் பெயரோடு எட்டுருபுகளும் வந்தன . மற்றை நான்கு பெயர்களோடும் இப்படியே ஒட்டுக .