உருபு புணரியல்

1. உருபுகள்

ஐம் முதலிய ஆறு உருபும் நிலைமொழி
வருமொழியோடு புணருமாறு

 
242ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் - நிலை மொழியோடும் வருமொழியோடும் புணரும் மெய் உயிர்களை முதலும் ஈறுமாக உடைய ஐம் முதலிய ஆறு உருபுகளும் , புணர்ச்சியின் மன் ஒக்கும் - இடைச்சொல்லாயினும் இயல்பொடு விகாரத்து இயையும் புணர்ச்சி வகையால் பெரும்பாலும் ஒக்கும் , வேற்றுமைப் புணர்ப்பு போன இரண்டியல் உள்ளும் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் , அப்பெயர் - இயல்பொடு விகாரத்து இயைந்த மெய் உயிர் முதலீற்றுப் பயர்களை ,

மன் என்றமையால் , சிறுபான்மை ஒவ்வா என்பதாம் .

நம்பிகண் வாழ்வு = இங்கே " ஆவி யரமுன் வன்மை மிகா " என்றும் " ணனவல் லினம் வரட் டறவும் பிறவரின் இயல்புமாகும் வேற்றுமைக்கு " என்றும் சொல்லியபடியே கண் உருபின் முதலும் ஈறும் இயல்பாயின .

உறிக்கட்டயிர் - இங்கே " இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும் " என்றும் , " ணனவல் லினம்வரட் டறவும் " என்றும் சொல்லியபடியே . கண்ணுருபின் முதலும் ஈறும் விகாரமாயின .

பழிக்கஞ்சி - இங்கே " இயல்யினும் விதியினும நின்ற உயிர் முன் க ச த ப மிகும் " என்றும் , " முற்றுமற் றொரோவழி " என்றும் சொல்லியபடியே , குவ் உருபின் முதலும் ஈறும் விகாரமாயின .

நம்பிக்குப் பிள்ளை - இங்கே " ஆவி யரமுன் வன்மை மிகா " என்ற விதி ஒவ்வாமல் குவ் உருபின் முதல் வல்லொற்று மிக்கது .

மற்றவையும் இப்படியே வருதலை ஆராய்ந்து அறிக .