பெயரியல்

சொல்லின் பொது இலக்கணம்
மூவகை மொழி

 
260ஒருமொழி யொருபொரு ளனவாந் தொடர்மொழி
பலபொரு ளனபொது விருமையு மேற்பன .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒருமொழி ஒருபொருளன ஆம் - ஒருமொழிகளாவன பகாப்பதமேனும் பகுபதமேனும் ஒன்று நின்று தத்தம் ஒருபொருளைத் தருவனவாம் ; தொடர்மொழி பல பொருளன = தொடர்மொழிகளாவன அவ்விருவகைப் பதங்களும் தன்னோடும் பிறதோடும் அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கத்தால் இரண்டு முதலியவாகத் தொடர்ந்து நின்று இரண்டு முதலிய பலபொருளைத் தருவனவாம் ; பொது (மொழி) இருமையும் ஏற்பன = பொதுமொழிகளாவன ஒன்றாய் நின்று ஒருபொருளைத் தந்தும், அதுவே தொடர்ந்து நின்று பலபொருளைத் தந்தும் , இவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்பனவாம் .

(1) நிலம் , நிலத்தன் , நட , நடந்தான் , தில் , மன் , தவ , நனி என வருவன ஒருமொழிகள் .

(2) நிலம் வலிது , அதுகொல் , சாலப்பகை , நிலங்கடந்தான், நிலத்தைக் கடந்தான் , நிலத்தைக் கடந்த நெடுமால் என வருவன தொடர்மொழிகள்.

(3) எட்டு , தாமரை , வேங்கை , எழுந்திருந்தான் என வருவன பொதுமொழிகள் , இவை , ஒரு மொழிகளாய் ஒரு பொருளைத் தருவனதன்றி , (எள் + து ; தா + மரை ; வேம் + கை; எழுந்து + இருந்தான் ) எள்ளைத் து , தாவுகின்ற மரை , வேகின்ற கை, எழுந்து பின் இருந்தான் எனத் தொடர்மொழிகளாய்ப் பல பொருளைத் தருதலும் காண்க [து-உண் என்னும் ஏவல் வினை ]