பெயரியல்

சொல்லின் பொது இலக்கணம்
ஐம்பால்

 
263ஒன்றே பலவென் றிருபாற் றஃறிணை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒன்று பல என்று இருபாற்று அஃறிணை - ஒன்றன்பாலும் பலவின்பாலும் என்று இரண்டு பாலினை உடைத்தாகும் அஃறிணை .

அஃறிணை உள்ளும் , களிறு , சேவல் என்பன முதலிய ஆண்பாலும் , பிடி , பேடை முதலிய பெண்பாலும் உள எனினும் , அவ் ஆண்பாலும் பெண்பாலும் , உயிர் உள்ளனவற்றுள் , புழு , மரம் முதலிய சிலவற்றிற்கும் , உயிர் இல்லாதனவற்றிற்கும் இல்லாமையால் அப்பகுப்பு ஒழித்து , எல்லாவற்றிற்கும் பொருந்த , ஒன்றன்பால் என்றார் .