பெயரியல்

சொல்லின் பொது இலக்கணம்
வெளிப்படை குறிப்பு

 
269ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
ஆகு பெயரன் மொழிவினைக் குறிப்பே
முதறொகை குறிப்போ டின்ன பிறவுங்
குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒன்று ஒழி பொதுச் சொல் - இருதிணை ஆண்பெண்ணுள் ஒன்றனை ஒழிக்கும் பொதுச் சொல்லும் , விகாரம் = வலித்தல் முதலாகிய ஒன்பது விகாரச் சொல்லும் , தகுதி = மூவகைத் தகுதி வழக்குச் சொல்லும் , ஆகுபெயர் = ஆகுபெயர்ச்சொல்லும் , அன்மொழி = அன்மொழித்தொகைச் சொல்லும் , வினைக்குறிப்பு = வினைக்குறிப்புச் சொல்லும் , முதல் = முதற்குறிப்புச்சொல்லும் , தொகை = தொகைக்குறிப்புச் சொல்லும் , குறிப்பு = இம்முதல் தொகை அல்லாத பல வழியாலும் வரும் குறிப்புச்சொல்லும் , இன்ன பிறவும் = இவை போல்வன பிறவும் , குறிப்பின் தரு மொழி = குறிப்பினால் இருதிணைஐம்பால் பொருள்களைத்தரும் சொற்களாம் , அல்லன வெளிப்படை (தருமொழி) = இவை அல்லன எல்லாம் வெளிப்படையால் அப்பொருள்களைத் தரும் சொற்களாம் .

1. ஆயிரமக்கள் பொருதார் என்ற இடத்து , மக்கள் என்னும் பொதுப்பெயரும் , பொருதார் என்னும் பொதுவினையும் உயர்திணைப் பெண்பாலை ஒழித்து , ஆண்பாலைக் குறிப்பால் உணர்த்தின .

2. குறுத்தாட்பூதம் , மரைமலர் என்றவிடத்து , இவ்விகாரச் சொற்கள் , குறுந்தாள் , தாமரை என்பனவற்றைக் குறிப்பால் உணர்த்தின

3. கால்கழீஇ வருதும் , திருமுகம் , பறி என்ற இடத்து , இத்தகுதி வழக்குச் சொற்கள் , மலங்கழுவி வருதும் , ஓலை , பொன் என்பனவற்றைக் குறிப்பால் உணர்த்தின .

4. புளிதின்றான் , கடுத்தின்றான் என்ற இடத்து , இவ்வாகுபெயர்கள் , அவற்றின் பழத்தைக் குறிப்பால் உணர்த்தின .

5. பொற்றொடி தந்தபுனைமடல் , அறற் கூந்தற்கில்லை யருள் என்ற இடத்து , இவ்வன்மொழித் தொகைகள் , அவற்றையுடைய மகளிரைக் குறிப்பால் உணர்த்தின .

6. இவன் இப்போது பொன்னன் என்ற இடத்துப் பொன்னன் என்பது பெயர்ப்பொருளை ஒழித்து , வினைக்குறிப்புப் பொருளைக் குறிப்பால் உணர்த்திற்று .

7. "அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபு" என்ற இடத்துப் , இம்முதற்குறிப்புச் சொற்கள் .'அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை' என்னும் பாட்டைக் குறிப்பால் உணர்த்தின .

8.அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ என்ற இடத்து ஐவர என்னும் தொகைக் குறிப்புச்சொல் பாண்டவரைக் குறிப்பால் உணர்த்திற்று .

9. கற்கறித்து நன்கட்டாய் , நீயீர் பெரிதுமறிதிர் பாயா வேங்கை , ' உவர்க்கட லன்ன செல்வரு முளரே கிணற்றூற் றன்ன நீயுமாருளையே' ; " பல்சான்றீரே பல்சான்றீரே கயன்முள் ளன்ன நரை முதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றீரே " இவை முதலானவை எல்லாம் பல வழியாலும் வரும் குறிப்புச்சொற்கள் .

' இன்ன பிறவும் ' என்றதனால் , தெரிதலைவினை குறிப்பு வினையாலணையும் பெயர்களும் , தெரிநிலை வினைமுற்றாலும் குறிப்பு வினை முற்றாலும் வரும் எச்சங்களும் , செய்யும் என்னும் முற்றும் , " கேட்குந போல" முதலியவாக அஃறிணை இடத்துச் சொல்லப்படுவனவும் , ஆகிய இவை முதலானவை குறிப்பால் பொருள் உணர்த்தும் எனக்கொள்க .

இப்படி அன்றி , நிலம் , நீர் , தீ, காற்று , வானம் என வருவன வெளிப்படையால் பொருள் உணர்த்துவனவாம் .