பெயரியல்

சொல் பாகுபாடு
திரிசொல்

 
272ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும்
பலபொருள் குறித்த வொருசொல் லாகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் லாகும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒருபொருள் குறித்த பலசொல் ஆகியும் = ஒரு பொருளைக் கருதிய பலசொற்களாயும் , பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும் = பலபொருள்களைக் கருதிய ஒரு சொல்லாகியும் , அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும் - அரிதாகக் கற்றோர் அறியும் பொருளனவாய் வருவன திரிசொல்லாகும் .

அரிதுணர் பொருளன என்றதனால் , ஒரு பொருள் குறித்த பல சொற்கள் உள்ளும் , பலபொருள் குறித்து ஒரு சொற்கள் உள்ளும் , இயற்சொல் ஒழியக் கொள்க .

திரிசொல் , இயற்சொல்லின் வேறுபட்ட சொல் , திரிதல் = வேறுபடுதல் , வேறுபடுதல் என்றது இயற்சொல்போல இயல்பால் உணரப்படாது அரிதின் உணரப்படுதலை .

1. 'கிள்ளை , சுகம் , தத்தை ' என்பன , கிளி என்னும் ஒரு பொருள் குறித்த பலபெயர்த் திரிசொல் . வாரணம் என்பது , யானையும் கோழியும் சங்கும் முதலாகிய பல பொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல் .

2. படர்ந்தான் , சென்றான் என்பன , போயினான் என்னும் ஒருபொருள் குறித்த பல வினைத் திரிசொல் , வரைந்தான் என்பது , நீக்கினான் , கொண்டான் என்னும் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்.

3. சேறும் , வருதும் என்பவற்றுள் , றும் , தும் என்னும் விகுதிகள் , தன்மைப் பன்மை எதிர் காலம் என்னும் ஒரு பொருள் குறித்த பல இடைத் திரிசொல் , கொல் என்பது ஐயமும் அசைநிலையுமாகிய பலபொருள் குறித்த ஒர் இடைத் திரிசொல் .

4. சால உறு, தவ, நனி, கூர் , கழி என்பன , மிகுதி என்னும் ஒரு பொருள் குறித்த பல உரித் திரிசொல் , கடி என்பது , காப்பு , கூர்மை , அச்சம் , கரிப்பு , விளக்கம் , சிறப்பு , மணம் முதலிய பலபொருள் குறித்த ஒர் உரித்திரி சொல் .

15