பெயரியல்

பெயர்ச்சொல்
எண்ணால் வரும் உயர்திணைப் பெயருக்குப் புறனடை

 
289ஓருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப்
பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒருவர் என்பது உயர் இரு பாற்று ஆய் = ஒருவர் என வழங்கும் சொல் உயர்தினை ஆண் பெண் இவ் இருபாற்கும் பொதுவாய், பன்மை வினை கொளும் பாங்கிற்று என்ப = அத்திணைப் பன்மைவாய்பாட்டு வினையைக் கொண்டுமுடியும் பாங்கினை உடைத்தாகும் என்று சொல்லுவர் புலவர்.

ஆடவள் ஒருவர் அறத்தின்வழி நிற்பார்; பெண்டிருள் ஒருவர் கொழுநன்வழி நிற்பார் என வரும். இங்கே, ஒருவர் நிற்பான் நிற்பாள் எனப் பகுதிக்கேற்ப ஒருமைச் சொல்லைக் கொள்ளாது. ஒருவர் நிற்பார் என விகுதிக் கேற்பப் பன்மைச் சொல்லையே கொண்டுமுடிதல் காண்க.

இனி, உரையிற்கோடல் என்னும் உத்தியால், உயர்த்தல் பொருட்டு ஆர் என்னும் இடைச் சொல்லை ஈற்றில் பெற்ற இருதிணைப் பொதுப்பெயரும், பால்பகா அஃறிணைப்பெயரும் சிறுபான்மை உயர்திணைப் பெயரும் பன்மைச் சொல்லோடு முடியும்.

1.சாத்தனார் வந்தார், முடவனார் வந்தார், முடக்கொற்றனார் வந்தார், தந்தையார் வந்தார் என இருதிணைப் பொதுப்பெயர்கள் பன்மைச் சொல்லொடு முடிந்தன.

2. நரியர் வந்தார் எனப் பால்பகா அஃறிணைப் பொதுப்பெயர் பன்மைச் சொல்லொடு முடிந்தது.

3.நம்பியார் வந்தார் , நங்கையார் வந்தார், இறைவனார் வந்தார்,அகத்தியனார் வந்தார், தொல்காப்பியனார் வந்தார் என உயர்திணைப் பெயர்கள் பன்மைச் சொல்லொடு முடிந்தன.

32