பெயரியல்

வேற்றுமை
விளியுருபுக்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி

 
307ஒருசார் னவ்வீற் றுயர்திணைப் பெயர்க்கண்
அளபீ றழிவய னீட்சி யதனோ
டீறு போத லவற்றோ டோவுறல்
ஈறழிந் தோவுற லிறுதியவ் வாதல்
அதனோ டயறிரிந் தேயுற லீறழிந்
தயலே யாதலும் விளியுரு பாகும்
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
னவ்வீற்று உயர்திணைப் பெயர்க்கண் = பொது விதி அன்றி னகரமெய்யீற்று உயர்திணைப் பெயர்களுள் , ஒருசார் அளவு = சில அளபெடுத்தலும் , ( ஒருசார் ) ஈறு அழிவு = சில ஈறு கெடுதலும் , ( ஒருசார் ) அயல் நீட்சி = சில ஈற்று அயல் நீளுதலும் , ( ஒருசார் ) அதனோடு ஈறுபோதல் = சில ஈற்று அயல் நீண்டு ஈறு கெடுதலும் ( ஒருசார் ) அவற்றோடு ஓ உறல் = சில ஈறுகெட்டு ஈற்று அயல் நீண்டு ஓகார மிகுதலும் ; (ஒருசார் ) ஈறு அழிந்து ஓ உறல் = சில ஈறு கெட்டு ஓகார மிகுதலும் , ( ஒருசார் ) இறுதி யவ்வாதல் = சில இறுதி னகர மெய் யகரமெய்யாதலும் ,( ஒரு சார் ) அதனோடு அயல் திரிந்த ஏ உறல் - சில ஈற்று னகர மெய் யகர மெய்யாகத் திரிந்து அயலில் ஆகாரம் ஓகாரமாய் ஏகாரம் மிகுதலும் , ( ஒருசார் ) ஈறு அழிந்து அயல் ஏ ஆதலும் = சில ஈறு கெட்டு அயலில் அகரம் ஏகாரமாதலும் , விளியுருபு ஆகும் = விளி உருகளாகும் .

அம்பர்கிழான் - அம்பர்கிழாஅன் - அளபாயிற்று .
புலவன் - புலவ - ஈறழிந்தது .
பெருமான் - பெருமான் ஈற்றயல் நீண்டது .
மன்னன் - மன்னா ஈற்றயல் நீண்டு ஈறு கெட்டது.
ஐயன் - ஐயாவோ - ஈற்றயல் நீண்டு ஈறுகெட்டு ஓகார மிக்கது .
திரையன் - திரையவோ ஈறழிந்து ஓகாரம் மிக்கது .
வாயிலான் - வாயிலாய் - இறுதி யவ்வாயிற்று .
வாயிலான் - வாயிலோயே - இறுதி யவ்வாய் , ஈற்றயல்
ஆகாரம் ஓகாரமாய் ஏகாரம்மிக்கது .

ஐயன் - ஐயே - ஈறழிந்து அயலில் அகரம் ஏகாரம் ஆயிற்று , இவ்வொருசார் என்பதை , விளி அதிகாரம் முழுதும் கூட்டுக .