ஒருவன் முதல் ஐந்தையும் படர்க்கையிடத்தும் = ஆண்பால் முதலாகிய ஐம்பால் வினைமுற்றுக்களையும் படர்க்கை இடத்திலும், ஒருமை பன்மையைத் தன்மை முன்னிலையினும் = ஒருமை வினைமுற்றையும் பன்மை வினைமுற்றையும் தன்மை இடத்திலும் முன்னிலை இடத்திலும் வைத்து, முக்காலத்திலும் முரண = முக்காலங்களாலும் மாற, முறையே = சொல்லப்பட்ட முறையே, மூவைந்து = படர்க்கை வினைமுற்றுக்கள் பதினைந்தும், இருமூன்று = தன்மைவினை முற்றுக்கள் ஆறும், ஆறு ஆய் = முன்னிலை வினைமுற்றுக்கள் ஆறும் ஆகி, முற்றுவினைப்பதம் ஒன்றே மூவொன்பான் ஆம் = தெரிநிலை வினைமுற்றுப்பதம் ஒன்றுமே இருபத்து ஏழாகும். 1. நடந்தான், நடந்தாள், நடந்தார்,நடந்தது, நடந்தன. இவை இறந்தகால வினைமுற்று (5), நடக்கின்றான், நடக்கின்றாள், நடக்கின்றார், நடக்கின்றது , நடக்கின்றன. இவை நிகழ்காலவினைமுற்று(5) நடப்பான், நடப்பாள், நடப்பார், நடப்பது, நடப்பன. இவை எதிர்கால வினைமுற்று -5 ஆகப் படர்க்கை வினைமுற்று - 15. 2. நடந்தேன், நடந்தோம் இவை இறந்தகால வினைமுற்று -2; நடக்கின்றேன் , நடக்கின்றேம் - இவை நிகழ்காலவினைமுற்று -2; நடப்பேன் நடப்பேம் - இவை எதிர்கால வினைமுற்று-2; ஆகத் தன்மை வினைமுற்று-6. 3. நடந்தாய் , நடந்தீர் இவை இறந்தகாலவினை முற்று.2. நடக்கின்றாய், நடக்கின்றீர் இவை நிகழ்காலவினைமுற்று -2;நடப்பாய் நடப்பீர் இவை எதிர்கால வினைமுற்று-2; ஆக முன்னிலை வினைமுற்று -6. ஆக வகை மூன்றுக்கும் முற்றுவினை - 27. 5
|