பொதுவியல்

ஒருமொழி வேறு ஒன்றை அமைத்தல்

 
358ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 

ஒருமொழி = பெயர், வினை, இடை, யுரிஎன்னும் நால்வகைச் சொற்களுள் ஒவ்வொன்று, ஒழி தன் இனம்கொளற்கு உரித்து = ஒழிந்து நின்ற தன்தன் இனங்களைக் கொண்டு முடிதற்கு உரித்தாகும்.

சோற்றை நனி உண்டான் என்றவழிக், கறியை நனி தின்றான் என்றல் தொக்கத்தனவும், பாக்கை நனி தின்றான் என்றவழி, வெற்றிலையை நனி தின்றான், சுண்ணாம்பை நனி தின்றான் என்பனவும், நஞ்சுண்டவன் சாவான் என்றவழி நஞ்சுண்டவள் சாவாள், நஞ்சுண்டவர் சாவார், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டவை சாகும் என்பனவும் கூறாதே அமைதலின், இனங்களாய் எஞ்சி நின்றன. இவற்றுள், சோற்றை என்னும் பெயர்ச்சொல்லும் உருபிடைச்சொல்லும் கறியை என்னும் பெயர்ச்சொல்லையும் உருபிடைச் சொல்லையும், நனி உண்டான் என்னும் உரிச்சொல்லும் வினைச்சொல்லும் நனி தின்றான் என்னும் உரிச்சொல்லையும் வினைச்சொல்லையும் கொள்ளுதற்கு உரியவாய் நிற்றல் காண்க. பிறவும் அன்ன

7