ஒருமையின் பன்மையும் = ஒருமைப்பாலில் பன்மைப்பால் சொல்லையும், பன்மையின் ஒருமையும் = பன்மைப்பாலில் ஒருமைப்பால் சொல்லையும் , ஓரிடம் பிறவிடம் ' = ஓரிடத்தில் பிற இடச் சொல்லையும் , தழுவலும் உள - தழுவிக் கூறுதல்களும் உளவாம். பால் : 1.வெயிலெல்லாம் மறைத்தது மேகம் என்புழி அஃறிணையிலே வெயில் என்னும் ஒருமைப்பாலின் எல்லாம் என்னும் பன்மைச்சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. " அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் செழியர் ', என்புழி, உயர்திணையிலே தந்தை என்னும் ஒருமைப்பாலில் செழியர் என்னும் பன்மைச்சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. அஃதை தந்தை அஃதைக்குத் தந்தை என விரியும். [அஃதை என்பது திக்கற்றவன் திக்கற்றவள் திக்கற்றது என உயர்திணை ஆண் ஒருமை பெண் ஒருமை அஃறிணை ஒருமைகளில் விரவி நிற்பதோர் பொதுச்சொல் ] தந்தை என்னும் ஒருமையில் செழியர் எனப்பன்மை வந்தது வழு; தனித்தனி ஒவ்வொருவராகக் கூடிச் செழியர் என நின்ற பன்மையில், ஒவ்வொருவரும் தனித்தனி அஃதைக்குத் தந்தை போல்வர் ஆதலால், வழு அமைதி ஆயிற்று.
2. இரண்டுகண்ணும் சிவந்தது என்புழி, அஃறிணையிலே இரண்டு என்னும் பன்மைப்பாலில் சிவந்தது என்னும் ஒருமைச்சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. "புலையன் எறிந்த பூசற் றண்ணுமை - ஏவலிளையர் தாய் வயிறு கரிப்ப" - என்புழி ,உயர்திணையிலே ஏவல் இளையர் என்னும் பன்மைப் பாலில் தாய் என்னும் ஒருமைச்சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. [ ஏவலிளையர் - போர்புரிவீரர் ] ஏவல் இளையர் தாய் ஏவல் இளையருக்குத் தாய் என விரியும். சேனை முழுமையும் உள்ள இளையருக்குத் தாய் ஒருத்தி ஆதல் கூடாமையால், இங்கே தாயென ஒருமை வருதல் வழு; இச்சேனையிலே திரண்டு நின்ற இளையருள் ஒவ்வொருவருக்கும் தாய் எனத் தனித்தனி சென்று இயைதலால் வழுவமைதி ஆயிற்று. இடம் :1.சாத்தன்றா யிவை செய்வலோ என்புழி,யான் எனச் சொல்லல் வேண்டும் தன்மையிலே சாத்தன் தாய் எனப் படர்க்கைச் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. சாத்தன் தாயாகிய யான் என்பது பொருள். 2." திண்பொரு ளெய்த லாகுந் தெவ்வரைச் செகுக்கலாகு நண்பொடு பெண்டிர் மக்கள்யாவையு நண்ணலாகு மொண்பொரு ளாவ தையா வுடன்பிறப் பாக்க லாகா வெம்பியை யீங்குப் பெற்றே னென்னெனக் கரியதென்றான்" என்புழித் , தன்றம்பியை முன்னிலைப்படுத்து அவனையே நோக்கிக் கூறுதலால், நின்னை எனச் சொல்லல்வேண்டும் முன்னிலையிலே எம்பியை எனப் படர்க்கைச் சொல் சேர்த்துச் சொல்லப்பட்டது. நீயோ அவனோ யாரிது செய்தார் ; யானோ அவனோ யாரிது செய்தார்; நீயோ யானோ யாரிது செய்தார்; நீயோ அவனோ யானோ யாரிது செய்தார் என விரவி ஓரிடத்தில் பிற இடம் வருதலும் கொள்க.
|