பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு விழாநிலையும் வழுவமைதியும்

 
392ஒருபொருண் மேற்பல பெயர்வரி னிறுதி
ஒருவினை கொடுப்ப தனியு மொரோவழி.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒரு பொருண் மேல் பல பெயர் வரின் = ஒரு பொருளின் மேலே பலபெயர்கள் வருமாயின் , இறுதி ஒரு வினை கொடுப்ப = பொருள் ஒன்றே என்பது தோன்ற இறுதியில் ஒருமுடிக்கும் சொல்லைக் கொடுத்துக் கூறுவர் , ஒரோவழித் தனியும் (கொடுப்ப) = ஒருபொருள் ஆகுகை தவறாத இடத்தே பெயர்தோறும் கொடுத்தும் கூறுவர் புலவர்.

1. ஆசிரியன் போரூர்கிழான் சாத்தன் வந்தான் எனவும்,

"குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட் செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டியான் போய் வருவன் வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப் பண்ணை நண்ணும் பளிக்கறைக்கே" எனவும், இவை, இறுதியிலே முறையே, வந்தான் எனவும், கண்டு எனவும் ஒரு முடிக்குஞ் சொல்லைக் கொண்டன.
2.
"மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கணான் குமரன் வந்தான்
மேவலர் மடங்கல் வந்தான் வேற்படை வீரன் வந்தர்
னேவருந் தெரிதறேற்றா திருந்திடுமொருவன் வந்தான்
றேவர்கடேவன் வந்தா னென்றன சின்ன மெல்லாம்" என்புழி, முதல்வன், குமரன், மடங்கல், வீரன், ஒருவன், தேவன் என்பன முருகன் என்னும் ஓரு பொருளே என்பது தெளிய நின்றமையினாலே, பெயர்தோறும் வந்தான் என ஒருவினை கொடுக்கபட்டமை காண்க.
41