இடையியல்

ஓகார விடைச்சொல்

 
423 ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை
கழிவசை நிலைபிரிப் பெனவெட் டோவே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஒழியிசை = ஒழியிசையும் , வினா = வினாவும் , சிறப்பு = சிறப்பும் , எதிர்மறை = எதிர்மறையும் , தெரிநிலை = தெரிநிலையும் , கழிவு = கழிவும் , அசைநிலை = அசைநிலையும் , பிரிப்பு = பிரிநிலையும் , என எட்டு ஓ = என்று எட்டுப் பொருளைத்தரும் ஓகார இடைச் சொல்.

சிறப்பு, உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இருவகைப்படும் . உயர்வுசிறப்பு ஒரு பொருளினது உயர்வைச் சிறப்பித்தல் . இழிவுசிறப்பு ஒரு பொருளினது இழிவைச் சிறிப்பித்தல் இங்கே சிறப்பித்தல் என்றது , உயர்வே ஆயினும் இழிவே ஆயினும் அதனது மிகுதியை விளக்குதல்.

1. படிக்கவோ வந்தாய் - இங்கே படித்தற்கு அன்று விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத் தருதலால் ஒழியிசை.

2. குற்றியோ மகனோ - இங்கே குற்றியா மகனா என வினாப்பொருளைத் தருதலால் வினா .

3. ஓ ஒ பெரியன் - இங்கே ஒருவனது பெருமையாகிய உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வு சிறப்பு

ஓ ஓ கொடியன்-இங்கே ஒருவனது கொடுமையாகிய இழிவின் மிகுதியை விளக்குதலால் இழிவு சிறப்பும்மை .

4. அவனோ கொண்டான் - இங்கே கொண்டிலன் என்னும் பொருளைத் தரும் இடத்து எதிர் மறை.

5. ஆணோ? அதுவுமன்று பெண்ணோ? அதுவுமன்று - இங்கே அத்தன்மை இல்லாமையைத் தெரிவித்து நிற்றலால் தெரிநிலை.

6. உறுதி உணராது கெட்டாரை ' ஓஒ தமக்கோ ருறுதி யுணராரோ ' என்னும் இடத்துக் கழிவிரக்கப் பொருளைத் தருதலால் கழிவு . [கழிவிரக்கம் - கழிந்ததற்கு இரங்குதல் ]

7. " காணிய வம்மினோ" - இங்கே வேறு பொருள் இன்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை.

8. இவனோ கொண்டான் - இங்கே பலருள் நின்றும் ஒருவனைப் பிரித்து நிற்கும் இடத்துப் பிரிநிலை.

4