எழுத்தியல்

9. இடைநிலை மயக்கம்

 
110க ச த ப வொழித்த வீரேழன் கூட்டம்
மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரெட்
டாகுமிவ் விருபான் மயக்கு மொழியிடை
மேவு முயிர்மெய் மயக்கள வின்றே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
க ச த ப ஒழித்த ஈரேழன் கூட்டம் மெய்ம் மயக்கு (ஆகும்) - க , ச , த , ப என்னும் நான்கையும் நீக்கிய பதினான்கு மெய்களும் பிற மெய்களோடு கூடும் கூட்டம் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ஆகும் , ரழ ஒழித்து ஈர் எட்டுக் (கூட்டம்) உடனிலை (மெய்ம்மயக்கு) ஆகும் - ர, ழ என்னும் இரண்டனையும் நீக்கி மற்றைப் பதினாறு மெய்களும் தம்மோடு கூடும் உடனிலை மெய்ம்மயக்கம் ஆகும் , இவ் இருபால் மயக்கும் மொழி இடை மேவும் - இவ் இரு வகை மயக்கமும் ஒரு மொழிக்கும் தொடர் மொழிக்கும் நடுவில் வரும் , உயிர்மெய் மயக்கு அளவு இன்று - உயிருடன் மெய்யும் மெய்யுடன் உயிரும் மாறி உயிரும் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு வரையறை இல்லை , வேண்டியவாறே மயங்கும் .

கூட்டம் எனினும் மயக்கம் எனினும் ஒக்கும் .

பின் உடனிலை என்றதனால் , முன் பிறமெய் என்பது கொள்ளப்பட்டது .

இச் சூத்திரத்தால் , மெய்யுடன் மெய்மயங்கும் இடத்துக் க , ச , த , ப என்னும் நான்கும் தம்மொடு தாமே மயங்கும் எனவும் , ர , ழ என்னும் இரண்டும் தம்மொடு பிறவே மயங்கும் எனவும் ஒழிந்த பன்னிரண்டு மெய்யும் தம்மொடு தாமும் பிறவும் மயங்கும் எனவும் பெற்றாம் .

உயிரும் மெய்யும் மயங்குதற்கு உதாரணம் :-
அல் , புள் என உயிருடன் மெய் மயங்கின .
கா , பூ என மெய்யுடன் உயிர் மயங்கின .

மற்றவைகளுக்கு உதாரணம் மேல் வரும் சிறப்புச் சூத்திரங்களில் காண்க.